தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பிரச்சாரத்துக்கு நடுவே அந்தந்தத் தொகுதிகளில் அதிமுக சார்பில் யாரை நிறுத்தலாம் எனவும் கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி வருவதாகச் சொல்கிறார்கள். அந்த விதத்தில் திருப்பத்தூர் மாவட்ட பிரச்சாரப் பயணத்தின் போது, தொடர்ந்து இரண்டு முறையாக திமுக வென்றுள்ள திருப்பத்தூர் தொகுதியில் இம்முறை திமுக-வை வீழ்த்த என்ன வழி என கட்சியினரிடம் அவர் கருத்துக் கேட்டபோது, டாக்டர் திருப்பதியின் பெயரை டிக் அடித்துக் கொடுத்திருக்கிறார் அதிமுக எம்பி-யான மு.தம்பிதுரை.
திருப்பத்தூர் எங்களின் கோட்டை என மார்தட்டி வருகிறது திமுக. அதற்கேற்ப இங்கே 1962 முதல் இதுவரை 9 முறை திமுக வென்றிருக்கிறது. 2016-ல், ஒன்றிய செயலாளரான அ.நல்லதம்பியை இங்கு நிறுத்தியது திமுக. இதற்கு உள்ளூர் திமுக-வில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால், அதை எல்லாம் சமாளித்து தேர்தலில் வெற்றி பெற்றார் நல்லதம்பி.
இதையடுத்து, மாவட்டச் செயலாளர் பதவியும் தனக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்த அவர், அது நடக்கவில்லை என்றதும் உட்கட்சி எதிரிகளை சரிக்கட்டி அடுத்த தேர்தலிலும் சீட் பெற காய் நகர்த்தினார். அதேபோல் எ.வ.வேலுவின் அருட்கருணையில் 2021-லும் திருப்பத்தூர் தொகுதியை மீண்டும் நல்லதம்பிக்கே ஒதுக்கியது திமுக. அப்போது அதிமுக-வுக்குப் பதிலாக அதன் கூட்டணி கட்சியான பாமக எதிர்த்துப் போட்டியிட்டதால் சுமார் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் எம்எல்ஏ ஆனார் நல்லதம்பி.
இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் 2-வது முறையாக வென்ற ஒரே எம்எல்ஏ என்ற அடிப்படையில் தனக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என எதிர்பார்த்தார் நல்லதம்பி. ஆனால், அது நடக்கவில்லை. இந்தச் சூழலில், மூன்றாவது முறையாக மீண்டும் திருப்பத்தூரில் களமிறங்க சிபாரிசுக்கு ஆள்பிடித்து வருகிறார். அதற்குள்ளாக, “இந்தமுறை எப்படியாச்சும் தொகுதியை கேட்டு வாங்கி ஜெயிச்சுட்டாருன்னா அண்ணன் கண்டிப்பா அமைச்சர் தான்” என நல்லதம்பியின் ஆதரவாளர்கள் நல்ல சேதி சொல்லி வருகிறார்கள். அவர்களின் அந்தக் கனவை தகர்க்கும் விதமாகவே டாக்டர் திருப்தியை அதிமுக வேட்பாளராக நிறுத்த பயணத்தின் போது பழனிசாமிக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார் தம்பிதுரை.
திருப்பத்தூர் மாவட்ட பிரச்சாரப் பயணத்தின் போது மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் 2026 தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் இபிஎஸ். அப்போது உடனிருந்த தம்பிதுரை, “எக்காரணம் கொண்டும் இம்முறையும் இங்கே திமுக-வை ஜெயிக்கவிடக் கூடாது. அது நடக்காமல் இருக்க வேண்டுமானால் செல்வாக்கான வேட்பாளரை நாம் நிறுத்த வேண்டும். அப்படி யாரெல்லாம் இருக்கிறார்கள்?” என்று கேட்டிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக சிலரது பெயர்களை உள்ளூர் நிர்வாகிகள் தெரிவித்த நிலையில், இறுதியாக, திருப்பத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளரான டாக்டர் திருப்பதியின் பெயரை பரிசீலிக்கலாம் என தம்பிதுரை யோசனை சொன்னாராம்.
அதிமுக தரப்பில் டாக்டர் திருப்பதியை வேட்பாளராக நிறுத்த ஆலோசிக்கப்பட்ட விஷயம் உடனடியாக திமுக தரப்புக்கு பரவியதை அடுத்து திமுக வட்டாரம் சற்றே திகிலடைந்து போயிருக்கிறது. ஏனென்றால், நல்லதம்பிக்கு சரிக்குச் சமமான நபராக கருதப்படும் திருப்பதி, பண பலம், ஆள் பலம், மக்கள் செல்வாக்கு அனைத்திலும் ஒருபடி முன்னே நிற்பவர். நல்லதம்பியின் சாதிக்காரராகவும் இருப்பதால் இவரை நிறுத்தினால் கஷ்டம் தான் என திமுக-வினரே முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இது குறித்து நல்லதம்பியிடம் பேசியபோது, ‘‘திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கடந்த 5 ஆண்டுகளில் 90 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறோம். திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தரம் உயர்வு, புறவழிச்சாலை அமைத்தது, 30 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத கிராமச் சாலைகளை புனரமைத்தது, திருப்பத்தூர் நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்தியது என திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களைக் கண்டிருக்கிறது திருப்பத்தூர்.
இதுமட்டுமல்லாது, திமுக அரசின் மக்கள் நலன் சார்ந்த பொதுவான திட்டங்களாலும் எங்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடி இருப்பதால் இம்முறை 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்போம்” என்றார் பெருத்த நம்பிக்கையுடன்.
நல்லதம்பியின் நம்பிக்கை கைகூடுகிறதா அல்லது தம்பிதுரையின் எண்ணம் ஈடேறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!