கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அவசரகதியில் வெளியிட்டது அதிமுக அரசு. இதன் தாக்கம் தென் மாவட்டங்களில் அதிமுக-வுக்கு தேர்தலில் பெரும் சரிவை உண்டாக்கியதாக அப்போது சர்ச்சைகள் வெடித்தன.
இந்த நிலையில் அதற்கு பரிகாரம் தேடும் விதமாக, “தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டவும் மத்திய அரசை வலியுறுத்துவோம்” என திண்டுக்கல் பிரச்சாரத்தில் திடீர் பிரகடனம் செய்திருக்கிறார் இபிஎஸ். இதுவும் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது.
இபிஎஸ்ஸின் இந்த அறிவிப்புக்கு தேவரின அமைப்புகள் பாராட்டு தெரிவித்து வரவேற்றுள்ளன. இதனால் கலவரப்பட்ட அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ‘‘தென் மாவட்டங்களில் ஒற்றுமையை குலைக்கும் வகையில் இபிஎஸ் இந்த வெற்று வாக்குறுதியை தந்துள்ளார்” என்றார். தினகரனின் இந்தக் கருத்தை அவருக்கு எதிராகவே திருப்பிவிட்ட அதிமுக-வினர், “தேவருக்கு பெருமை சேர்ப்பது தினகரனுக்கு பிடிக்கவில்லை” என கொளுத்திப் போட்டனர்.
இதனால் மேலும் பதற்றமான தினகரன், “2021 சட்டமன்ற தேர்தலின் போது, தேவர் திருமகனாரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும் எனவும் தேவர் திருமகனாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் எனவும் நாங்கள் தேர்தல் வாக்குறுதியிலேயே சொல்லி இருக்கிறோம்” என தனியாக பிரஸ் மீட் போட்டு தன்னிலை விளக்கம் கொடுத்தார்.
மதுரை விமானநிலையத்துக்கு தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையானது சுப்பிரமணியன் சுவாமி மதுரைக்கு எம்பி-யாக இருந்த காலத்திலிருந்தே விவாதத்தில் இருக்கிறது. இருப்பினும், அண்மைக் காலத்தில் இதுகுறித்து யாரும் பேசாத நிலையில், தேர்தல் சமயத்தில் தேவரின மக்களின் அபிமானத்தைப் பெறுவதற்காக இபிஎஸ் திடீரென தேவர் பெயரை தூக்கிப் பிடித்திருப்பது, அதிமுக-வை ஆதரிக்கும் பட்டியலின மக்கள் மத்தியில் அதிமுக-வுக்கு எதிரான சிந்தனையை விதைக்கக் கூடும் என்கிறார்கள்.
அதற்கேற்ப இபிஎஸ்ஸின் கருத்துக்கு உடனே ரியாக்ஷன் காட்டிய புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, “தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியின் குறைகள், மக்கள் பிரச்சினைகளை சுட்டிக்காட்டித்தான் பிரச்சாரம் செய்யவேண்டும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் பேசாமல் சம்பந்தமில்லாமல் ஏற்கெனவே முடிந்துபோன விஷயத்தைப் பற்றி பழனிசாமி பேசி இருக்கிறார்.
மறைந்த தலைவர்களின் பெயர்களை மாவட்டம், போக்குவரத்து கழகங்களுக்கு வைக்கக்கூடாது என்ற அரசாணை அமலில் இருக்கும்போது, தற்போது மதுரை விமான நிலையத்திற்கு தலைவர் ஒருவரின் பெயரை வைப்பது குறித்து யாருடைய தூண்டுதலின் பெயரிலோ பழனிசாமி பேசி இருக்கிறார்” என்றார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் கே.சி.திருமாறன், “மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை 1996-லிருந்தே இருக்கிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட நடவடிக்கை எடுப்போம் எனச் சொல்லி இருந்தார் ஸ்டாலின். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் அவர் எடுக்கவில்லை.
அதனால் அதிமுக மீது நம்பிக்கை வைத்து, விமான நிலையத்துக்கு தேவர் பெயரை வைக்கவும், தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என இபிஎஸ்ஸிடம் கோரிக்கை வைத்தோம். அதை ஏற்றே அவர் தற்போது வாக்குறுதி அளித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பால் தென் மாவட்டத்தில் அதிமுக கடந்த தேர்தலில் இழந்த செல்வாக்கை இம்முறை மீட்டெடுக்கும்” என்றார்.
வன்னியருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்ட விவகாரத்துக்கே ஆண்டுகள் ஐந்தாகியும் இன்னும் விடை தெரியவில்லை. இந்த நிலையில் புதிதாக இன்னொரு சர்ச்சைக்கு பூஜை போட்டிருக்கிறார் இபிஎஸ்!