கோவை: நேபாளத்தில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய கிளர்ச்சியை தொடர்ந்து, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலகினர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றார். எனவே, நேபாளத்தில் இனி அமைதி திரும்பும் என நம்புவதாக கோவையில் தங்கி கல்லூரியில் பயின்று வரும் அந்நாட்டு மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை தனியார் கல்லூரியில் படிக்கும் நேபாளத்தை சேர்ந்த மாணவி முஸ்கன் சராப் மற்றும் மாணவர்கள் பங்கஜ் படுவால், தின்கர் திவாரி ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: ஊழலுக்கு எதிராகவும், சமூக ஊடகங்களுக்கு தடை விதித்த நடவடிக்கையை கண்டித்தும் நேபாளத்தில் இளைஞர்கள் குழுவினர் ‘ஜென் ஸீ’ என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெருக்கடியால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. வன்முறைச் சம்பவங்களில் பலர் உயிரிழந்தனர்.
எங்கள் நாட்டில் நடந்த நிகழ்வுகள் மிகவும் கவலை கொள்ள செய்தன. கலவரத்தில் எங்கள் குடும்பத்தினர் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் அங்கு நடந்த நிகழ்வுகளை அவர் கள் கூறும்போது எங்களுக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. தற்போது இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்றுள்ளார்.
முதல் பெண் பிரதமர் என்பதில் பெருமை கொள்கிறோம். ஊழலுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டவர். கோவையில் நேபாளத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் பயின்று வருகின்றனர். நாங்கள் இங்கு மிகவும் பாதுகாப்பாக உணர்கிறோம். நேபாளத்தில் பிரதமர், அமைச்சர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் இயல்பு நிலை திரும்பும். அமைதி நிலவும் என நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.