சென்னை: உச்ச நீதிமன்ற கண்டனத்துக்குப் பிறகாவது தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தொகுப்பூதியம் பெறும் ஒப்பந்த செவிலியர்களை தமிழக அரசு சுரண்டுகிறது. செவிலியர்களை அளவுக்கு அதிகமாக உழைப்புச் சுரண்டல் செய்கிறீகள். ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்கவும் மறுக்கிறீர்கள். அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கவும் மறுக்கிறீர்கள்” என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. சமூக நீதி பேசும் திமுக அரசு செவிலியர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும்.
தமிழக மருத்துவத்துறையில் பத்தாண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், அதை செயல்படுத்த வேண்டிய அரசு, அதற்கு பதிலாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது தான் உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.
செவிலியர்களின் உழைப்பைச் சுரண்டுவதாக உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது முற்றிலும் சரியானது. 2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டித்தேர்வு நடத்திதான் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8 ஆயிரம் செவிலியர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை.
நிரந்தர செவிலியர்கள் செய்யும் அதே பணியைத் தான் இவர்களும் செய்கின்றனர். ஆனால், நிரந்தர செவிலியர்களுக்கு மாதம் ரூ.62 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் நிலையில், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ.18 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. நிரந்தர செவிலியர்களை விட தொகுப்பூதிய செவிலியர்கள் குறைந்த பணியையே செய்வதாகக் கூறி அவர்களின் ஊதியத்தை உயர்த்தவும், பணி நிலைப்பு வழங்கவும் திமுக அரசு மறுத்து வந்தது.
பின்னர் சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் பார்த்திபன், பாரதிதாசன் ஆகியோர் தொகுப்பூதிய செவிலியர்களின் பணியை ஆய்வு செய்து, அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என அறிக்கை அளித்த பிறகு தான் அவர்களுக்கு சம ஊதியம் வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டடது. ஆனால், அதைக் கூட செய்ய திமுக அரசு மறுக்கிறது.
சமூக நீதி சமூக நீதி என்று பேசும் திமுக அரசு, செயல்பாட்டில் அதைக் கடைபிடிப்பதில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 33,987 பேருக்கு மருத்துவத் துறையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாக அத்துறையின் அமைச்சர் கூறி வருகிறார். ஆனால், அவர்களில் 6.977 பேர் மட்டும் தான் மருத்துவத் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட நிரந்தரப் பணியாளர்கள் ஆவர். மீதமுள்ள சுமார் 27 ஆயிரம் பேரும் தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் ஆவர். இதுவா சமூக நீதி?
செவிலியர்களின் உழைப்பைச் சுரண்டுவதாக உச்ச நீதிமன்றமே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக அரசு அதன் தவறை ஒத்துக்கொண்டு அவர்களை பணி நிலைப்பு அல்லது சம வேலைக்கு சம ஊதியம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், சமூக நீதி என்பதற்கான பொருள் திமுக அரசுக்கு தெரியாது என்பதால்தான் அதைச் செய்யாமல் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்து நடத்துகிறது. இப்போதாவது தமது உழைப்புச் சுரண்டலையும், சமூக அநீதியையும் ஒப்புக் கொண்டு, தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவருக்கும் சம ஊதியம் வழங்க அரசு முன்வர வேண்டும்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.