சென்னை: “திமுக அரசின் திட்டங்களை பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் போட்டி போட்டு பாராட்டி இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் இதே ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 5,000-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா நடந்தது. அதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர், அவர் கூறும்போது, சேலத்தைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம் (அன்புமணி ஆதரவாளர்), அருள் (ராமதாஸ் ஆதரவாளர்) ஆகிய இருவரும் தமிழக அரசை போட்டி போட்டு பாராட்டி இருக்கிறார்கள்.
அதாவது, சேலம் மாவட்டத்துக்கு திமுக அரசு பல்வேறு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. அதற்கு என் பாராட்டுகள் என ஒற்றுமையோடு பாராட்டினார்கள். அவர்கள் எப்போதுமே இதே ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மக்கள் பணியை தொடர்ந்து சிறப்பாக செய்ய வேண்டும் என உங்கள் சார்பில் நான் கேட்டுகொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.