முதலில் ‘லோகா’ படத்தை வாங்க யாருமே ஆர்வம் காட்டவில்லை என்று நடிகரும், தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
டாமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லோகா: சாப்டர் 1’. துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான இப்படம் அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பைப் பெற்றது. இதனால் உலகமெங்கும் மொத்த வசூலில் ரூ.250 கோடியைத் தாண்டியிருக்கிறது.
’லோகா: சாப்டர் 1’ வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர் துல்கர் சல்மான் அளித்த பேட்டியில், “எங்களுடைய தயாரிப்பில் 7-வது படம் ’லோகா’. ஆனால், இதுபோல எந்தவொரு படத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இப்படத்தை குறைந்த முதலீட்டில் எடுத்தோம். தயாரிப்பாளராகவோ, நடிகராகவோ எந்தவொரு படமும் இவ்வளவு பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்தப் படம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, கலாச்சாரம் மாதிரி பரவிவிட்டது. இதனால் அனைவரும் இப்படத்தினைப் பற்றி பேசுவதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. தயாரிப்பாளராக முதலில் இப்படத்தின் மூலம் நமக்கு நஷ்டம் ஏற்படக் கூடும் என்று நினைத்தேன். பின்பு அடுத்தடுத்த பாகங்களில் அதனை ஈடுகட்டிக் கொள்ளலாம் என்றுதான் திட்டமிட்டோம். ஏனென்றால், இப்படத்தை வாங்குவதில் யாருமே ஆர்வம் காட்டவில்லை.
இப்படம் வெளியான முதல் நாளில் இந்தியா முழுக்கவே அனைத்து மொழிகளிலும் விமர்சனம் வந்ததைக் கண்டேன். இந்திய ரசிகர்கள் எப்போதுமே எந்த மொழி படமொன்றாலும் முதல் நாளில் பார்த்து விமர்சனங்கள், ரீல்ஸ் செய்வார்கள். இதெல்லாம் நடக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
பின்பு மக்களிடையே கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் உட்பட படக்குழுவினர் அனைவருமே ஒருவித நம்பிக்கையில்லாமல் இருந்தோம். இப்போது உள்ள வெற்றியைப் பார்த்து அடுத்த பாகத்துக்கு என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார் துல்கர் சல்மான்.