பிஹார் தேர்தலில் 243 தொகுதிகளிலும் பசு பக்தர்களை சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி நிறுத்த உள்ளார்.
உத்தராகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோதிஷ்வர் பீடம், 5 பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் தலைவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி. இவர் சங்கராச்சாரியார்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவர், தொடர்ந்து பசுப் பாதுகாப்பு மற்றும் பசுவதை தடை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வலியுறுத்தி வருகிறார்.
இவர் துறவிகள் சார்பில், புதிதாக ஓர் அரசியல் கட்சி தொடங்க உள்ளார். இக்கட்சி சார்பில் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளார். இதற்கு முன்பாக பிஹாரின் மதுபனியிலிருந்து இவர் யாத்திரை தொடங்கியுள்ளார்.
இதன் தொடக்கத்தில் அவர் பேசுகையில், “இந்தியாவில் இருந்து மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுத்தப்படவில்லை. தற்போதைய பாஜக கூட்டணி ஆட்சியிலும் இது அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகளிடம் நேர்மை இல்லை. பசு இறைச்சி நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பது இதற்கு காரணமாக உள்ளது.
ஒருபுறம், பிரதமர் நரேந்திர மோடி தனது கட்சி பசுப் பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பதாக கூறுகிறார். மறுபுறம், மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. இது மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. எனவே, பசு பக்தர்களை பிஹாரின் அனைத்து தொகுதிகளிலும் எனது கட்சி சார்பில் நிறுத்த உள்ளேன்.
டெல்லியில் தேசிய கட்சிகளின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று பசுவை தேசத்தின் தாயாக அறிவிக்க வலியுறுத்தினேன். ஆனால் இதுவரை எந்த கட்சியும் இந்த விஷயத்தில் தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை” என்றார்.
இவர், உ.பி.யின் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள பிரம்மன்பூர் கிராமத்தில் பிறந்தார். வாராணசியில் உள்ள சம்பூர்ணானந்த் சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் சாஸ்திரி மற்றும் ஆச்சார்யா கல்வியில் பட்டம் பெற்றார். அப்போது மாணவர் அரசியலில் நுழைந்து, 1994-ம் ஆண்டு மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் துறவியான பிறகு பாஜக ஆளும் மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதால் பிரபலமானார்.