லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு 403 எக்ஸ்ரே டெக்னீஷியன்கள் தேர்வு செய்யப்பட்ட னர். அப்போது உ.பி.யில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசு பொறுப்பில் இருந்தது.
எக்ஸ்ரே டெக்னீஷியன்களில் ஆக்ராவை சேர்ந்த அர்பித் சிங் என்பவரும் ஒருவர். நியமன பட்டியலில் 80-வது இடத்தில் அவர் இடம்பெற்றிருந்தார். அதன்பிறகு சில நாட்களில் ‘அர்பித்’ என்ற பெயரில் 6 பேர் மற்ற மாவட்டங்களில் உள்ள சுகாதார மையங்களில் எக்ஸ்ரே டெக்னீஷியன்களாகப் பணியில் சேர்ந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஆக்ராவை சேர்ந்த உண்மையான அர்பித் சிங்கின் நியமன கடிதம் மற்றும் ஆதார் உட்பட அனைத்து ஆவணங்களையும் போலியாக தயாரித்து அரசுப் பணியில் சேர்ந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாரா மெடிக்கல் துறை இயக்குநராக உள்ள டாக்டர் ரஞ்சனா கரே, வசிர்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதில் பல்ராம்பூர், பரூக்காபாத், பண்டா, ராம்பூர், அம்ரோஹா, ஷம்லி ஆகிய மாவட்டங்களில் ‘அர்பித்’ என்ற பெயரில் 6 பேர் போலியாக வேலை செய்துள்ளனர். அதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளாக அரசு சம்பளம் பெற்றுள்ளனர்.
இதுவரை ரூ.4.5 கோடி அரசு பணம் அவர்களுக்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று டாக்டர் ரஞ்சனா கரே தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மோசடி கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், ஆள் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க உ.பி. துணை முதல்வரும் சுகாதாரத் துறை அமைச்சருமான பிரஜேஷ் பதக்கை முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டுள்ளார்.
உ.பி.யில் அரசுப் பணியில் இருப்பவர்கள் பற்றிய விவரங்கள் சரி பார்க்கும் பணி நடைபெறுகிறது. அதற்காக, ‘மானவ் சம்படா’ என்ற பெயரில் ஆன்லைன் போர்ட்டல் தொடங்கப்பட்டது. இந்த போர்ட்டல் மூலம் அரசு ஊழியர்களை சரி பார்க்கும் போது, 6 மாவட்டங்களில் ஊழியரின் பெயர், தந்தை பெயர், பிறந்த நாள் எல்லாம் ஒன்றாக இருந்தது அம்பலமாகி உள்ளது. அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக மாதம் ரூ.69,595 சம்பளம் பெற்று வந்துள்ளனர்.