நாக்பூர்: மத்திய அரசு எத்தனால் கலந்த பெட்ரோலை (E20) விற்பனை செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என்பதுடன் கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், கரும்பு மற்றும் மக்காச்சோளத்தை பயிரிடும் விவசாயிகளுக்கு எத்தனால் கலப்பு மூலம் அதிக வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எத்தனால் கலப்பால் மைலேஜ் மற்றும் வாகனங்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு விமர்சனங்களை மோட்டார் வாகன துறை நிபுணர்கள் முன்வைக்கின்றனர். குறிப்பாக, நிதின் கட்கரியின் மகன்கள் நடத்தி வரும் இரண்டு முன்னணி எத்தனால் நிறுவனங்கள் பயன்பெறவே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக நிதின் கட்கரி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சர்ச்சையை பற்றி குறிப்பிடாமல் நாக்பூரில் நடந்த ஒரு விழாவில் நிதின் கட்கரி பேசியதாவது:
எனது மகன்களுக்கு யோசனை கூறுவேன். ஆனால், நான் மோசடியில் ஈடுபட்டதில்லை. சமீபத்தில் எனது மகன் 800 கன்டெய்னர்களில் ஆப்பிளை ஈரானில் இருந்து இறக்குமதி செய்தார்.
அதேபோன்று 1,000 கன்டெய்னர்களில் வாழைப்பழங்களை இந்தியாவிலிருந்து ஈரானுக்கு ஏற்றுமதி செய்தார். ஈரானுடன் எந்த பண பரிவர்த்தனையும் இல்லை. என் மகன் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளான். எனக்கு ஒரு சர்க்கரை ஆலை, மதுபான தொழிற்சாலை, மின் உற்பத்தி நிறுவனம் சொந்தமாக உள்ளன. தனிப்பட்ட லாபத்துக்காக விவசாயத்தில் சோதனை முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
எனக்கு போதுமான வருமானம் கிடைத்து வருகிறது. மாதத்துக்கு ரூ.200 கோடி சம்பாதிக்கும் அளவுக்கு எனக்கு மூளைத் திறன் உள்ளது. என்னைப் பொறுத்தவரை பணப்பற்றாக்குறை என்பது எனக்கு கிடையாது. எனது வணிக பரிந்துரைகள் அனைத்தும் வளர்ச்சிக்கானவை. லாபத்துக்கானது அல்ல.
பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு திட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக சமூக ஊடகம் மூலம் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. பணம் கொடுத்து அதுபோன்ற பிரச்சாரங்கள் பரப்பப்படுகின்றன. இந்த திட்டம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், நாட்டில் மாசுபாட்டை குறைப்பதிலும் உண்மையில் வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.