புதுடெல்லி: வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க செயற்கை நுண்ணறிவின் பங்கு என்ற தலைப்பில் நிதி ஆயோக் சார்பில் டெல்லியில் நேற்று சிறப்பு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக நகரங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ஏஐ தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும். அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.
ஏஐ தொழில்நுட்பத்தால் பல்வேறு சவால்களும் எழுந்துள்ளன. இதுகுறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க விதிகளை வரையறுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.