சென்னை: பாமகவின் தலைவராக அன்புமணியே தொடர்வார் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வழங்கியுள்ளது. மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் ஏ மற்றும் பி பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கட்சியின் செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக தலைவர் அன்புமணி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவை அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கியுள்ளது.
அந்தக் கடிதத்தில் பாமகவின் தலைவராக அன்புமணி தொடர்வார். அதேபோல், 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வரை கட்சியின் தலைவராக அன்புமணியும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமா உட்பட ஏனைய நிர்வாகிகளும் அப்படியே தொடர்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதேநேரத்தில் கட்சியில் அன்புமணியை ஏற்று கொண்டவர்கள் மட்டும்தான், கட்சியினுடைய கொடி, சின்னத்தை பயன்படுத்த முடியும் மற்றவர்கள் பயன்படுத்த கூடாது. ராமதாஸ் லட்சியங்களையும், நோக்கங்களையும் அன்புமணி தலைமையில் நிறைவேற்றுவோம். பாமகவில் தனித்தனி அணிகள் எதுவும் கிடையாது.
ஒரே அணி தான். அன்புமணி தலைமையிலான நிர்வாகிகள் மட்டும்தான் பாமகவைச் சேர்ந்தவர்கள். சிறு குழப்பத்தின் காரணமாக இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்தனர். இந்த கடிதத்தின் மூலமாக அவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம். பாமகவை மேலும் வலிமையாக்க, ஒதுங்கி இருப்பவர்கள், விலகி நிற்பவர்கள் அன்புமணியின் தலைமையை ஏற்று இந்த பக்கம் வரவேண்டும்.
கட்சியின் கொடி, சின்னத்தை அன்புமணி தலைமையிலான நிர்வாகிகள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். கட்சிக்கு சம்பந்தம் இல்லாத மற்றவர்கள் பயன்படுத்துவது தவறு. பாமக தற்போது கட்சி அங்கீகாரத்தை இழந்திருக்கிறது. தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் வழங்க அதிகாரம் இருக்கிறது. அந்த அடிப்படையிலே தான் சின்னத்தையும், இந்த அங்கீகார கடிதத்தையும் வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடிதத்தில் அன்புமணி பெயர் இல்லை: எம்எல்ஏ அருள் விளக்கம்
சேலம்: சேலத்தில் செய்தியாளர்களிடம் பாமக எம்எல்ஏ அருள் கூறியதாவது: தேர்தல் கமிஷனிடம் இருந்து கடிதம் வந்துள்ளதாக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். அதில் மாம்பழம் சின்னத்தை பாமகவுக்கு கொடுத்துள்ளது என்று அந்த கடிதத்தில் உள்ளதாகவும் காண்பித்து இருக்கிறார். பாமக அலுவலக முகவரியை, ராமதாசுக்கு தெரியாமல் மாற்றி கொடுத்து தேர்தல் ஆணைய கடிதத்தைப் பெற்றுள்ளனர்.
அந்த கடிதத்தில், அன்புமணி தான், பாமகவின் தலைவர் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. பாமக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்பட்ட கட்சி. அதன்படி, தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு, 2% வாக்குகளை பெறும் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒரே சின்னத்தை தொடர்ந்து வழங்கும். அந்த அடிப்படையில் தற்போதும் மாம்பழச் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.