சென்னை: ஆளுமைகள் வழிநடத்திய புரட்சிகர இயக்கத்தில் மாபெரும் பொறுப்பை ஏற்பதாகவும், தன்னை வாழ்த்தியவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பொறுப்பேற்றுள்ள மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக, மு.வீரபாண்டியன் கடந்த செப்.13-ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறி மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலத்தில் கடந்த ஆக.15 முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் புதிய மாநிலக் குழுவும், கட்டுப்பாட்டுக் குழுவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து கட்சியின் புதிய மாநிலக் குழுக் கூட்டம் கடந்த செப்.13-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக என்னை ஒரு மனதாக தேர்வு செய்தனர்.
இதற்கு வாழ்த்திய தமிழக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், பொது வாழ்வு பிரமுகர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், இயக்கத் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், ஊடக நண்பர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சிங்காரவேலர், ப.ஜீவானந்தம், பி.சீனிவாசராவ், மோகன் குமாரமங்கலம், பி.ராமமூர்த்தி, எம்.வெங்கட்ராமன், எம்.கல்யாணசுந்தரம், கே.பாலதண்டாயுதம், ப.மாணிக்கம், இரா.நல்லகண்ணு, தா.பாண்டியன், இரா.முத்தரசன் என பன்முக ஆளுமைகள் வழிநடத்திய புரட்சிகர இயக்கத்தின் மாபெரும் பொறுப்பு எளியவனின் தோளில் சுமத்தப்பட்டுள்ளது.
மாநில நிர்வாகக் குழு, மாநிலக் குழு மற்றும் மாவட்ட அமைப்புகளில் உள்ள ஆற்றல்மிக்க தோழமை உறவில் நின்று பணியாற்றி, கட்சியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக முன்னேற அனைவரது வாழ்த்துகளும் உரமாக நின்று ஊக்கம் தரும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.