சென்னை: சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாக துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று பொது சுகாதாரத் துறையில் புதிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்ட உணவு பாதுகாப்புத் துறையில் முதுநிலை பகுப்பாய்வாளர் 15, ஆய்வக தொழில்நுட்புநர் நிலை-2-க்கு 3 என மொத்தம் 18 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
42 ஆய்வக தொழில் நுட்புநர்களுக்கு பணிவரன்முறை ஆணைகள் தரப்பட்டுள்ளன. வாரியம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட 33,987 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் 43,755 பேருக்கு கலந்தாய்வு மூலமாக பணி மாறுதல் ஆணை தரப்பட்டுள்ளன. வரும் 22-ம் தேதி 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் முதல்வர் வழங்கவுள்ளார். மீதமுள்ள கிராம சுகாதார செவிலியர்களுக்கான பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தில் குறுகிய காலத்துக்கான எக்ஸ்ரே எடுத்து, அதனை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆராய்ந்ததில் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது. புற்றுநோயை தொடக்க கட்டத்தில் கண்டறிய மேமோகிராம் பரிசோதனை சிறிய அளவிலான செயற்கை நுண்ணறிவு மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சோதனை அடிப்படையில்… சென்னை – ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை, பெரியார் அரசு மருத்துவமனைகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. இதனை விரிவுப்படுத்த துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 20 பேர் கொண்ட நிபுணர்கள் ஆராய்ந்து அதுகுறித்த அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன்பிறகு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்திலுள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதிதாக தொடங்கப்பட்ட 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க்கடி, பாம்புக்கடிகளுக்கான மருந்துகள் இருப்பு வைக்கப் பட்டுள்ளன. தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவது, நாய்க்கடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஆணையர் லால்வேனா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் சோமசுந்தரம், கூடுதல் இயக்குநர் தேவபார்த்தசாரதி, துணை இயக்குநர் சித்ரசேனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.