சென்னை: தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கையாக மின்சார தளவாடப் பொருட்களை போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக மின்வாரியம் மற்றும் துணை நிறுவனங்கள் இடையிலான உயர்நிலை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். குறிப்பாக, அனைத்து வட்டங்களிலும் தேவையான தளவாடப் பொருட்களை மழைக்கு முன்பாக இருப்பு வைக்க வேண் டும். தாழ்வான மின்பெட்டிகளை உயர்த்துவது, வெளியே தெரியும் புதைவட கம்பிகளை சரிசெய்வது உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். சீரான மின் உற்பத்தியை உறுதிசெய்ய போதிய அளவில் நிலக்கரி கையிருப்பில் வைக்க வேண்டும். நுகர்வோருக்கு தடையில்லா மின் விநியோகம் வழங்கப்பட வேண்டும். பொதுமக்கள், பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோக திட்டங்கள், மத்திய, மாநில அரசு திட்டங்களின் முன்னேற்றம், உள்ளாட்சி அமைப்புகளுடன் பராமரிப்பு பணிகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.