திண்டுக்கல்லுக்கும் அதிமுக-வுக்கும் பிரிக்கமுடியாத பிணைப்பு உண்டு. ஏனென்றால், 1972-ல் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் தான் அதிமுக-வின் முதல் வேட்பாளரான மாயத்தேவரை நிறுத்தி சுமார் 1.45 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கவைத்துக் காட்டினார் எம்ஜிஆர்.
அந்தத் தேர்தலில் சுயேச்சைகளுக்காக ஒதுக்கப்பட்ட சின்னமான இரட்டை இலை மாயத்தேவருக்கும் ஒதுக்கப்பட்டு, அது தனது முதல் தேர்தலிலேயே வெற்றிக் கணக்கை தொடங்கியதும் திண்டுக்கல்லில் தான். அதிமுக-வுக்கும் திண்டுக்கல்லுக்கும் இப்படியொரு பந்தம் இருப்பதாலோ என்னவோ, திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக-வால் ஜொலிக்க முடியவில்லை.
கடந்த கால் நூற்றாண்டில் திமுக திண்டுக்கல் தொகுதியில் ஒரே ஒரு முறை (1996) மட்டுமே வாகை சூடி இருக்கிறது. அதேசமயம், அதிமுக இங்கு இதுவரை நான்கு முறை வென்றிருக்கிறது. கடந்த இரண்டு தேர்தல்களாக தொடர்ந்து திண்டுக்கல்லை தக்கவைத்து வரும் அதிமுக-வின் திண்டுக்கல் சீனிவாசன் இப்போது தனக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமென காத்திருக்கிறார். அவரது அந்தக் கனவை தகர்த்து இம்முறை திண்டுக்கல்லில் உதயசூரியனை ஜெயிக்க வைக்க வேண்டும் என உடன் பிறப்புகள் உத்வேகக் குரல் எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திண்டுக்கல் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வெள்ளிமலை, “திண்டுக்கல் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என்பது எங்களின் நெடுநாளைய ஆசை. தேர்தலுக்குத் தேர்தல் கட்சித் தலைமையிடம் இதை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தால் தொகுதியை கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட்டுக்கு ஒதுக்கிவிடுகிறது தலைமை.
திண்டுக்கல் சீனிவாசனே தொடர்ந்து இரண்டு முறை இங்கே ஜெயிக்கும் போது திமுக-வால் ஜெயிக்க முடியாதா என்பது தான் எங்களது கேள்வி. எங்கள் அமைச்சர் ஐ.பெரியசாமியோ அல்லது மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரோ திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டால் நிச்சயம் இங்கே திமுக ஜெயிக்கும். களம் இப்போது திமுக-வுக்கு சாதகமாக இருப்பதால் திண்டுக்கல் தொகுதியில் இம்முறை நிச்சயம் திமுக வெல்லும். அதை மனதில் வைத்து நாங்களும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறோம்” என்றார்.
திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜசேகரிடம் இதுகுறித்து கேட்டதற்கு, “திண்டுக்கல் தொகுதி எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே அதிமுக-வுக்கு சாதகமான தொகுதி. இங்கு அதிமுக நேரடியாக போட்டியிட்டாலும் அதிமுக கூட்டணி கட்சி போட்டியிட்டாலும் தொடர்ந்து வெற்றி எங்களுக்கே கிடைத்து வந்துள்ளது.
திமுக ஆட்சியில் திண்டுக்கல் தொகுதிக்காக குறிப்பிடும்படியாக எந்தத் திட்டமும் வரவில்லை. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் வாட்டி வதைப்பதால் திண்டுக்கல் நகர மக்கள் இம்முறையும் திமுக-வுக்கு சாதகமாக சிந்திக்க மாட்டார்கள். எனவே, திண்டுக்கல் சீனிவாசன் இங்கு மூன்றாவது முறையாக ஜெயிப்பது நிச்சயம்” என்றார்.
திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் 2006 முதல் தொடர்ச்சியாக வென்று வரும் அமைச்சர் ஐ.பெரியசாமியை தோற்கடிக்க முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனை 2016-ல் ஆத்தூர் தொகுதியில் கொண்டு போய் நிறுத்தினார் ஜெயலலிதா. அதேபோல், இம்முறை திண்டுக்கல் சீனிவாசனை தோற்கடிக்க ஐ.பெரியசாமியையோ அவரது மகனையோ திண்டுக்கல்லில் நிறுத்தத் துணியுமா திமுக தலைமை?