சென்னை: வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தவெக தலைவர் விஜய் சொல்வது மக்கள் மனதில் எப்போதும் நிலைக்காது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அரசு மனநல மருத்துவமனை சார்பில், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நேற்று நடந்த “உலக தற்கொலை தடுப்பு வாரம்” நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றார். பின்னர் துண்டு பிரசுரம் விநியோகித்து, விழிப்புணர்வு பதாகை ஏந்தி மனித சங்கிலி நிகழ்வில் பங்கேற்றார்.
இதில் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் சோமசுந்தரம், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை – மருத்துவ கல்லூரி டீன் சாந்தாராம், அரசு மனநல மருத்துவமனை இயக்குநர் மாலையப்பன், மருத்துவர் பூர்ண சந்திரிகா மற்றும் மருத்துவர்கள், செவிலிய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2001-ம் ஆண்டு அதிக தற்கொலைகள் நிகழ்ந்திருக்கும் ஆண்டாக இருந்தது. இதனை தடுக்கும் விதமாக சாணிப்பவுடருக்கு தடை, எலி மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மனம் என்கின்ற மனநல மருத்துவ சேவைகள் அமைப்புகள் தொடங்கப்பட்டு மருத்துவம், பொறியியல் மற்றும் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்கொலையோடு சேர்த்து, போதை தடுப்பு விழிப்புணர்வு, போதைக்கு எதிரான விழிப்புணர்வு அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றவில்லை என்று தவெக தலைவர் விஜய் சொல்வது மக்கள் மனதில் எப்போதும் நிலைக்காது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.15 கோடி பேர் மகிழ்ச்சியோடு பயன்பெற்று வருகிறார்கள். தினந்தோறும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விடியல் பயணம் மூலம் பயன்பெறுகின்றனர்.
புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களால் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உயர்கல்விக்கு செல்பவர்களின் எண்ணிக்கை 29 சதவீதமாக உயர்ந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 53 சதவீதமாக உள்ளது. விஜய் போன்றவர்கள் எல்லாம் இதையெல்லாம் மறக்கக் கூடாது.
பொருளாதார வளர்ச்சி பட்டியலில் குஜராத், கோவா உள்ளிட்ட 6 மாநிலங்கள் இடம் பெறவே இல்லை. இந்தியா முழுமைக்கும் பொருளாதார வளர்ச்சி என்பது 6.5 சதவீதம். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது 11.19 சதவீதம் ஆகும். விஜய் போன்றவர்கள் இதுகுறித்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.