திண்டுக்கல்: “தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2026-ல் சீமானுக்கும் விஜய்க்கும் இடையேதான் மூன்றாம் இடத்துக்கான போட்டி நிலவுகிறது” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “2026-ம் ஆண்டு இரண்டாவது முறையாக ஸ்டாலின் ஆட்சி அமைப்பார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம் இடத்துக்கு வர வேண்டும் என முயற்சி செய்கிறார்.
மூன்றாவது இடத்துக்கு யார் வருவது என்பதில் சீமானுக்கும் விஜய்க்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. இந்த இருவராலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. திமுக கூட்டணிக்கு 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்கும். இந்தத் தேர்தலை பொறுத்தவரை முதல்வருக்கு போட்டி யாரும் இல்லை.
விஜய்க்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது. பொழுதுபோக்குக்காக விஜய்யை பார்ப்பதற்கு அனைவரும் செல்கின்றனர். பார்க்க வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது. கருணாநிதியை போல் மூன்று மடங்கு உழைக்கிறார் ஸ்டாலின். தேர்தல் களத்தில் நாங்கள் ஆற்றும் பணியால் இதுவரை பெறாத வெற்றியை வரும் தேர்தலில் பெறுவோம்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

