இணையத்தில் புகைப்படத்தை வைத்து எழுந்த கிண்டல்களுக்கு நடிகர் தனுஷ் பதிலளித்துள்ளார்.
தனுஷ், நாகார்ஜுனா நடித்த ‘குபேரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தனுஷ் கோபமாக பார்க்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. அதனை வைத்து பலரும் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். புகைப்படத்துக்காக கூட நடிக்கிறார் என்றெல்லாம் குறிப்பிடத் தொடங்கினார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக தனுஷ் பதிலளித்துள்ளார். ‘இட்லி கடை’ இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளர் டிடி, அந்தப் புகைப்படத்தை காட்டி இந்த சமயத்தில் என்ன சார் நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தனுஷ், “நிறைய நடிகர்களுக்கு ஒரு பழக்கம் இருக்கும். சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய் உள்ளிட்டோரும் ஒத்துக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.
ஒரு சிலர் பேசும்போது, நல்ல இசை கேட்கும்போது நடிகர்கள் அவர்களை அறியாமல் அதில் நடித்துப் பார்ப்பார்கள். அதனை தெரிந்து பண்ண மாட்டோம், தெரியாமல் செய்துவிடுவோம். அன்றைய தினத்தில் ‘ராயன்’ படத்தின் பாடலை குழந்தைகள் ரொம்ப அழகாக பாடிக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்து எங்கே இருக்கிறோம், என்ன பண்றோம் என்பதே தெரியாமல், ‘ராயன்’ கதாபாத்திரமாக மாறிவிட்டேன். என்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு இது தெரியும்.
சில சமயங்களில் என்ன இவன் பைத்தியம் மாதிரி ஏதோ பண்ணிட்டு இருக்கான் என நினைப்பார்கள். அப்படி நடந்தது கொஞ்சம் சங்கடமாகத் தான் இருந்தது” என்று பதிலளித்துள்ளார் தனுஷ்.