தர்ஷன், கெளதம் மேனன் நடிக்கும் ‘காட்ஸ்ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘காட்ஸ்ஜில்லா’. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. மோகன் குரு செல்வா இயக்கும் இப்படம் முழுக்க காதல் கலந்த காமெடி படமாகும்.
இப்படத்தில் தர்ஷன் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் கெளதம் மேனன் நடிக்கவுள்ளார். புராணக் கற்பனையும், நகைச்சுவையும், காதலையும் ஒருங்கிணைக்கும் வித்தியாசமான கதையாக இப்படம் இருக்கும் என்கிறது படக்குழு. காதலில் தோல்வியுற்ற இளைஞன் ஒருவரின் வாழ்க்கையில் தெய்வீக தலையீடு நிகழ்வதன் மூலம் சுயஅறிவு, மீட்பு மற்றும் காதலை நோக்கிய பயணம் தான் இப்படத்தின் மையக்கரு என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தின் பூஜையில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் தாணு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் விஜய், சசி மற்றும் பாண்டிராஜ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அலிஷா மிரானி, ரோபோ சங்கர், கே.வி.ஒய் வினோத், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் தர்ஷன் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக சிவராஜ், எடிட்டராக அரவிந்த் பி.ஆனந்த், இசையமைப்பாளராக கார்த்திக் ஹர்ஷா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.