சென்னை: மாநிலத்துக்குள் மின்சார வர்த்தகம் மேற்கொள்ள தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். காற்று, நீர், சூரிய ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தலை நெறிப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் உருவாக்கப்பட்டது.
தமிழகத்தின் மின்சார உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கை 2030-ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்துவதும், புதுப்பிக்கத்தக்க கொள்முதல் இலக்கை அடைவதும் பசுமை எரிசக்தி கழகத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.
இந்நிலையில் சூரிய சக்தி, காற்றாலை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை கொள்முதல் செய்து, மின் விநியோக நிறுவனங்களுக்கு விற்கும் வணிகத்தில் ஈடுபட பசுமை எரிசக்தி கழகம் திட்டமிட்டது. அதன்படி, மாநிலத்துக்குள் மின்சார வர்த்தகம் மேற்கொள்வதற்கு உரிமம் கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் பசுமை எரிசக்தி கழகம் விண்ணப்பித்த நிலையில் அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பசுமை எரிசக்தி கழக அதிகாரிகள் கூறியதாவது: மின் தேவையை பூர்த்தி செய்வதில், புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுவதுமாக பயன்படுத்தவும், அதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் மாநில மின்வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன.
நாட்டிலேயே காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்திக்கு சாதகமான சூழல் நிலவுவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது.இதற்கிடையே, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை கொள்முதல் செய்து, மின் பகிர்மான கழகம் உள்ளிட்ட மின் விநியோக நிறுவனங்களுக்கு விற்கும் வணிகத்தில் ஈடுபடும் வகையில் ‘ஜி’ வகை உள்மாநில வர்த்தக உரிமம் கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் கடந்த ஜூலை மாதம் விண்ணப்பித்தது.
தற்போது அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியாளர்களுக்கும், மாநில மின்பகிர்மான நிறுவனத்துக்கும் இடைத் தரகராக செயல்பட இந்த உரிமம் உதவும். இந்த உரிமத்தால் ஆண்டுதோறும் 500 மில்லியன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அலகுகளை விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாநிலத்துக்குள் உள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியாளர்களிடம் இருந்து பசுமை மின்சாரத்தை பெற்று, வர்த்தக கமிஷன் அடிப்படையில் மின்வாரியத்துக்கு விற்பனை செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.