புதுடெல்லி: பிஹாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் செல்லத்தக்கதா என்பது குறித்த இறுதி வாதம் வரும் அக்டோப ர் 7-ம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிஹாரில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின்போது, 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இது தொடர்பாக ஏடிஆர் அமைப்பு உட்பட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜோய்மால்ய பக்சி அமர்வு விசாரித்து வருகிறது. முந்தைய விசாரணையின்போது, வாக்காளர் பட்டியலில் பெயரை உறுதிப்படுத்தும் ஆவணங்களில் ஒன்றாக ஆதாரையும் சேர்க்க பரிசீலிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அவர்கள் தங்கள் உத்தரவில், “ஆதார் அட்டையை குடியுரிமைக்கான ஆவணமாக ஏற்க முடியாது. எனினும், அடையாள ஆவணமாக ஏற்றுக் கொள்ள முடியும். பிஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின்போது ஆதார் அட்டையை 12-வது அடையாள ஆவணமாக ஏற்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது பிஹார் வாக்காளர் குழுக்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் விரந்தா குரோவர், சிறப்பு தீவிர திருத்தம் ஒரு சட்டவிரோத நடவடிக்கை என்றும், அதனால் பிஹார் குடிமக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
ஏடிஆர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், “தனது சொந்த வழிகாட்டும் கையேட்டை தேர்தல் ஆணையம் கடுமையாக மீறியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க உரிமை கோரியவர்களில் 30% பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்” என்று குற்றம் சாட்டினார்.
இதையடுத்துப் பேசிய நீதிபதிகள், “தேர்தல் ஆணையம் அரசியலம்பபு வரம்புகளுக்குள் செயல்படும் என்று நீதிமன்றம் கருதுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 1-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அதை ஆய்வு செய்வது பெரிய விஷயமல்ல. சட்டவிரோதமாக நடைபெற்றிருந்தால் நிச்சம் அது ஒதுக்கப்படும். பிஹார் சிறப்பு தீவிர திருத்தத்தின் செல்லுபடி தன்மை குறித்த இறுதி விசாரணை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். சிறப்பு தீவிர திருத்தம் தொடரபாக துண்டு துண்டாக கருத்துகளைத் தெரிவிக்க நீதிமன்றம் விரும்பவில்லை” என தெரிவித்தனர்.