கோவை: நடிகர் அஜித் வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும். கூட்டத்தை பார்க்காமல் கொள்கையை பார்க்க வேண்டும் என, நடிகர் விஜய் செயல்பாடுகள் குறித்து சீமான் கருத்து தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இளையராஜாவிற்கு முதலில் நான் தான் பாராட்டு விழா எடுப்பதாக இருந்தது. அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் போது இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என விட்டு விட்டேன்.
திருச்சியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு கூடிய கூட்டம் என்பது அவரை திரையில் பார்த்தவர்கள் தற்போது நேரில் பார்க்க ஆவலுடன் வருகின்றனர். ரஜினி, நயன்தாரா, அஜித் ஆகியோர் வந்தாலும் கூட்டம் கூடத்தான் செய்யும். கூட்டத்தைப் பார்க்காதீர்கள், கொள்கைகளை பாருங்கள். மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான். விஜய்க்கு கூடிய கூட்டம் வாக்குகளாக மாறுமா என்பது அடுத்த ஆண்டு மே மாதம் தெரிந்துவிடும்.
அடுத்து மலைகளுக்காக போராட்டம் நடத்த உள்ளேன். நான் பேசுவது, போதிப்பது எல்லாம் தற்போது புரியாது. பாதிக்கும் போது தான் புரியும். நான் போராடியதால்தான் எட்டு வழிச் சாலை, ‘டங்ஸ்டன்’ தொழிற்சாலை ஆகிய திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.