சென்னை: “பிரிந்து கிடக்கின்ற அதிமுகவின் சக்திகள் ஒன்றினைய வேண்டும். அதிமுகவின் சட்ட விதிகளுக்கு இன்று ஊறு விளைவிக்கப்பட்டுள்ளது” என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: அதிமுக ஒன்றிணைந்தால் தான், இந்த இயக்கத்தைத் தொடங்கிய எம்ஜிஆரின் நோக்கம் நிறைவேறும். அண்ணாவின் தாரக மந்திரங்களை வைத்துதான் இருபெரும் தலைவர்கள் ஆட்சி நடத்தினார்கள். பிரிந்து கிடக்கின்ற அதிமுகவின் சக்திகள் ஒன்றினை வேண்டும்.
தொண்டர்களின் உணர்வுகளையும் தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து நடந்து கொள்ள வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய அதிமுகவின் சட்ட விதிகளுக்கு இன்று ஊறு ஏற்பட்டுள்ளது. அவர்களின் கனவுகள் நனவாகும் வகையில் இன்று சட்டவிதிகள் இல்லை.
சாதாரண தொண்டர்கள்கூட கழகத்தின் பொதுச்செயலாளராக வரலாம் என்ற சட்ட விதி இருந்தது. ஆனால் இந்த விதியை இன்று காற்றிலே பறக்க விட்டிருக்கிறார்கள். செங்கோட்டையனுடன் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அவரும் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்” என்றார்.
பின்னர், மீண்டும் என்டிஏ கூட்டணிக்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு, “அரசியலில் எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.