மும்பை: மகாராஷ்டிர ஆளுநராக ஆச்சார்ய தேவ்விரத் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
மகாராஷ்டிரா ஆளுநராக இருந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத்துக்கு மகாராஷ்டிராவின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், ஆச்சார்ய தேவ்விரத் மகாராஷ்டிர ஆளுநராக பதவியேற்கும் விழா மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்றது. பாம்பே உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆச்சார்ய தேவ்விரத் சமஸ்கிருதத்தில் பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, சீருடைப் பணியாளர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் தேவ்விரத் ஏற்றுக்கொண்டார்.
66 வயதாகும் தேவ்விரத், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து வந்த இவர், கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட்டில் இமாச்சலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2019, ஜூலை வரை அப்பதவியில் இருந்த அவர், பின்னர் குஜராத் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2019 முதல் குஜராத் ஆளுநராக இருந்து வரும் ஆச்சார்ய தேவ்விரத், தற்போது மகாராஷ்டிரா ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.