புதுக்கோட்டை: பள்ளி மாணவர்களை வரவழைத்து பிரச்சாரத்தில் கூட்டத்தைக் காண்பிக்கும் பரிதாபமான நிலை தவெக தலைவர் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது என தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் திமுக தெற்கு மாவட்டச் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியது: தமிழகம் முழுவதிலும் இருந்து ஆட்களை வரவழைத்து திருச்சியில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி, மக்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார் தவெக தலைவர் விஜய். தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என அவர் கூறுவது தவறு.
கோரிக்கைகளை நிறை வேற்றியதாலேயே மக்களை எப்போதும்போல சந்தித்து வருகிறோம். திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு இல்லை. ஆதரவு அலைதான் உள்ளது. திமுக அசைக்க முடியாத சக்தியாக இருப்பதால்தான் எதிர்க்கட்சிகள் பொய் குற்றச்சாட்டு கூறுகின்றன. பாஜகவுடன் மறைமுகமாகவோ, நேரடியாகவோ உறவில் இருக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை.
பள்ளி மாணவர்களை அழைத்து வந்து கூட்டத்தை காண்பிக்க வேண்டிய பரிதாபமான நிலை நடிகர் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் விதிமுறைகளை மீறி தவெகவினர் நடந்து கொண்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமை யைச் செய்யும்.
2011-ல் திமுகவை ஆதரித்து நடிகர் வடிவேல் பிரச்சாரம் செய்தபோது விளம்பரமே இல்லாமல் கூட்டம் கூடியது. ஆனால், அவை வாக்காக மாறவில்லை. அதுபோல, தற்போது விஜய்க்கு கூடும் கூட்டமும் என்றார்.