ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஹாங்காங்கில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் லக்சயா சென்னும், சீன வீரர் லீ ஷெபெங்கும் மோதினர்.இதில் லீ ஷெபெங் 21-15, 21-12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். 2-வது இடம் பிடித்த லக்சனா சென்னுக்கு வெள்ளி கிடைத்தது.
சாட்விக், சிராக் ஜோடிக்கு 2-வது இடம்: இதேபோட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி 2-வது இடம் பிடித்தது. இறுதிப் போட்டியில் சீனாவின் லியாங் வெய், வாங் சாங் ஜோடி 21-14, 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் சாட்விக், சிராஜ் ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது. 2-வது இடம்பிடித்த இந்திய ஜோடிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
உலக துப்பாக்கிச் சுடுதல்: மேகனாவுக்கு வெண்கலம்
உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை மேகனா சஜ்ஜனார் வெண்கலம் வென்றார்.
சீனாவின் நிங்போ நகரில் இந்த போட்டி சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு(ஐஎஸ்எஸ்எஃப்) சார்பில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் மேகனா சஜ்ஜனார் 233 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். சீனாவின் பெங் ஜின்லு தங்கப் பதக்கத்தையும், நார்வேயின் ஜீனட் ஹெக் டஸ்டாட் வெள்ளியையும் வென்றனர். இந்தப் போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், ஒரு வெண்கலத்தைக் கைப்பற்றியுள்ளது.