சென்னை: மாணவர்களுக்கு தொழில்நுட்பங்களை பயிற்றுவிப்பதற்காக பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் ஆய்வகங்கள் அமைக்கும் பணிகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணினிசார் அடிப்படை அறிவியலையும், செயற்கை நுண்ணறிவு திறனையும் கற்பிக்கும் வகையில் டிஎன்ஸ்பார்க் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஏஐ, ரோபோட்டிக்ஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயிற்றுவிக்கும் நோக்கில் பள்ளிக்கல்வித் துறை இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன்படி வாரத்துக்கு 2 பாடவேளைகளில் ஏஐ, ரோபோட்டிக்ஸ் வகுப்புகள் நடக்கும். அதில்
சிறந்து விளங்கும் மாணவர்கள், நவீன தொழில்நுட்ப ஆய்வகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுவார்கள்.
இதற்காக, முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஒன்று வீதம் மொத்தம் ரூ.15 கோடியில் ரோபோட்டிக்ஸ் ஆய்வகங்கள் அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்பட உள்ளன. வரும் நவம்பர் மாதத்துக்குள் இந்தப் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.