நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-ஏ பிரிவில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று லீக் சுற்று ஆட்டத்தில் விளையாடிறன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
அந்த அணிக்காக சஹிப்சதா பர்ஹான், சயீம் அயூப் ஆகியோர் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்டியா வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் சயீம் அயூப் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் 3 ரன்களில் முகமது ஹாரிஸ் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டமிழந்தனர். பகர் ஸமான், கேப்டன் சல்மான் ஆகா, ஹசன் நவாஸ், முகமது நவாஸ், சஹிப்சதா பர்ஹான், பஹீம் அஷ்ரப் ஆகியோர் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3, அக்சர் படேல் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 128 ரன்கள் தேவை என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.ஓப்பனிங் இறங்கிய அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 31 ரன்களுடன் வெளியேறினார். மறுமுனையில் ஆடிய ஷுப்மன் கில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 47 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை ஏற்றினார். திலக் வர்மா 31 ரன்களும், ஷிவம் டூபே 10 ரன்களும் என 3 விக்கெட் இழப்புக்கு 15 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்து வெற்றியை தனதாக்கியது இந்திய அணி. 3 விக்கெட்டுகளையும் சயீம் அயூப் கைப்பற்றியிருந்தார்.