சென்னை: ’இட்லி கடை’ படம் உருவான கதை குறித்து நடிகர் தனுஷ் உருக்கமாக பேசியுள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். டான் பிக்சர்ஸ் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் தனுஷ் பேசியதாவது: “நான் சிறுவயதாக இருக்கும்போது எங்கள் ஊரில் ஒரு இட்லி கடை இருக்கும். தினமும் அந்த இட்லி கடையில் எப்படியாவது இட்லி சாப்பிட வேண்டும் என்று எனக்கு இருக்கும். என்னுடைய சிறுவயதில் ரொம்ப முக்கியமான கேரக்டர் அந்த இட்லி கடை. எப்படியாவது அங்கே இட்லி சாப்பிட்டு விட வேண்டும். ஆனால் என் கையில் காசு இருக்காது. அப்போது என்ன செய்வார்கள் என்றால், காலையில் வயலில் இறங்கி பூ பறிக்க சொல்வார்கள். எவ்வளவு பூக்கள் பறித்து கொடுக்கிறோமா அவ்வளவு காசு கொடுப்பார்கள்.
எனவே நான், என் அக்கா இருவர் காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து அந்த வயலுக்கு சென்று பூ பறிப்போம். தொடர்ந்து இரண்டரை மணி நேரம் விடாமல் பறிக்க வேண்டும். அப்படி செய்தால் ஆளுக்கு இரண்டு ரூபாய் கிடைக்கும். அதை எடுத்துக் கொண்டு நேராக ஒரு தோட்டத்துக்கு செல்வோம். அங்கே இருக்கும் ஒரு குட்டையில் ஆசை தீர குளிப்போம். பின்னர் அந்த கடைக்குள் சென்று இரண்டு ரூபாய் கொடுத்து 4 இட்லி வாங்கி சாப்பிடுவோம்.
அப்படி உழைத்து சாப்பிடும்போது வரும் சுவையும் நிம்மதியும் சந்தோஷமும் பெரிய ரெஸ்டாரண்ட்களில் கூட எனக்கு கிடைக்காது. இந்த இட்லி கடையை வைத்து நாம் ஏன் ஒரு படம் எடுக்கக் கூடாது என்று தோன்றியது. வெறும் இட்லி கடை மட்டுமின்றி அந்த கிராமத்தில் என மனதை பாதித்த ஒரு சில உண்மை கதாபாத்திரங்களையும் அதன் பிறகு நாங்கள் சென்னை வந்தபிறகு என் மனதை பாதித்த சில உண்மை கதாபாத்திரங்களையும் வைத்து எழுதப்பட்ட கற்பனையான கதை இந்த ‘இட்லி கடை’” இவ்வாறு தனுஷ் பேசினார்.