திருச்சி: “தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் முறையான திட்டமிடல் இல்லை. அரசு சொத்துகளை தவெகவினர் சேதப்படுத்தியுள்ளனர்” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சாடியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளார்களிடம் கூறும்போது, “கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் திருச்சி மாவட்டத்துக்கு திமுக செய்துள்ள வளர்ச்சி திட்டங்களை விஜய் பார்க்கவில்லை போலும். திருச்சி மாவட்டத்துக்கு மட்டும் ரூ.30,000-ல் இருந்து ரூ.40,000 கோடிக்கு பல்வேறு திட்டங்களை திமுக அரசு செய்துள்ளது.
திருச்சிக்கு இரண்டாம் தலைநகரமாக ஆகும் அளவுக்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில், இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்தப் பலனும் இல்லை, ஒட்டுமொத்தமாக எதுவும் செய்யவில்லை என விஜய் சொல்வதை அறிவு சார்ந்த திருச்சி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுக மீதான விஜயின் கருத்துக்கு நாங்கள் செயல்படுத்திய திட்டங்களே பதிலாக இருக்கும்.
விஜய் பிரச்சாரத்தில் முறையான திட்டமிடல் இல்லை. நமது வரிப்பணத்தில் உருவாகப்பட்ட அரசு சொத்துகளை சேதப்படுத்தியுள்ளனர். மக்களுக்கு சொல்ல வேண்டிய கருத்துகளை தெளிவாக கொண்டு செல்வதற்கான முன்னேற்பாடுகளை அவர் மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.