விருதுநகர்: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
இதுகுறித்து விருதுநகரில் இன்று அவர் அளித்த பேட்டியில், “ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுகவின் முன்னெடுப்பில் 1 கோடி குடும்பங்களுக்கு மேலானோர் இணைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 68 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் வாக்குச் சாவடி முகவர்கள் அப்பகுதியில் உள்ள ஒவ்வாரு வீட்டுக்கும் சென்று மக்களை இத்திட்டத்தில் இணைக்கும்போது, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறோம்.
மத்திய அரசு நமது மொழி, இனத்தை அழிக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து மக்களை ஒன்றிணைக்கும் எண்ணத்தோடு ஓரணியில் தமிழ்நாடு என்று மக்களை இணைத்து வருகிறார் முதல்வர். நாளை அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் பொதுமக்களோடு இணைந்து நடத்த உள்ளோம். மண், மொழி, இனம் காக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று கூறி மக்களோடு இணைந்து உறுதிமொழி ஏற்க உள்ளோம்.
விருதுநகர் மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் 4.19 லட்சம் குடும்பத்தினர் இணைந்துள்ளனர். இன்னும் இணைந்துகொண்டிருக்கிறார்கள். மக்களை சந்திக்க நாங்கள் செல்லும் எந்த இடத்திலும் மக்கள் அரசை விமர்சனம் செய்யவில்லை; திட்டங்களை விமர்சனம் செய்யவில்லை.
மக்கள் முதல்வரோடு இருக்கிறார்கள், முதல்வர் மக்களோடு இருக்கிறார். மக்களோடு இணைந்து செயல்பட்டு வருகிறோம். 20ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பொதுக் கூட்டமும், கரூரில் 30-ம் தேதி முப்பெரும் விழாவும் நடைபெற உள்ளது.
உங்களோடு ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் அதிகமாக மகளிர் உரிமைத் தொகை குறித்த மனுக்கள் வருகின்றன. இதை சென்னைக்கு அனுப்பிவைக்கிறோம். முதல்வரைப் பொருத்தவரை தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார். தகுதியுள்ளார் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். இந்த அரசைவிட வேறு யாரும் நல்ல அரசை நடத்த முடியாது. திட்டங்கள் பெயர் சொல்ல முடியாத அளவுக்கு அதிகமான திட்டங்கள் உள்ளன.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து குழு அமைக்கப்பட்டு, நிதி துறையில் உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என தேர்தல் நேரத்தில் நாங்கள் கூறியது உண்மை. அரசிடம் தற்போது நிதி இல்லை. ஏற்கனவே இருந்த அரசு ஆட்சியில் இருந்தபோது நிதி இல்லாமல் செய்துவிட்டனர். தற்போது அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும். ஏற்கனவே உள்ள வட்டி சுமையையும் கட்டியாக வேண்டும்.
இதுபோன்ற காரணங்களால் தான். அரசு ஊழியர்களுக்கு கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் முதல்வருக்கு இல்லை. இதற்காக அரசு ஒரு குழு அமைத்துள்ளது. அக்குழுவில் அரசு ஊழியர் சங்கத்தினரும் உள்ளார்கள். அவர்களுடன் கலந்து நல்ல முடிவை முதல்வர் எடுப்பார். எந்த கட்சி பிரச்சாரம் செய்ய இடம் கேட்டாலும் கொடுக்கப்படுகிறது. காவல்துறையோ, அரசோ யார் பிரச்சாரம் செய்வதையும் தடுப்பதில்லை” என்று கூறினார்.