திண்டுக்கல்: “சசிகலாவை கூடிய விரைவில் சந்திப்பேன், செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார். டெல்லி செல்லும் எண்ணம் எனக்கு இல்லை” என திண்டுக்கல்லில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தேனியில் இருந்து சென்னை செல்ல திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகைதந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செங்கோட்டையன் கொடுத்த கெடு முடிவடையும் நிலையில், அவர் திரும்பவும் ஒரு நல்லசெய்தி சொல்வார். சசிகலாவை சந்திக்க வாய்ப்பு உள்ளது. உரியநேரத்தில் சந்திப்பேன்.
கூடிய விரைவில் சந்திப்பேன். உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் சந்திப்பேன். விஜய் உடன் கூட்டணி குறித்த கேள்விக்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். அது நல்லவிதமாக நடக்கும். டில்லி செல்லும் எண்ணம் இல்லை. நயினார் நாகேந்திரன் இரண்டு தினங்களுக்கு முன்பு போனில் பேசினார்.
சந்திக்கவேண்டும் என்று சொன்னார். உறுதியாக சந்திப்போம் என்று சொல்லியுள்ளேன். எடப்பாடி பழனிச்சாமியை மாற்றினால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுவேன் என்று டிடிவி சொன்னது குறித்து அவரிடம் தான் கேட்கவேண்டும். இவ்வாறு ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க எடப்பாடி பழனிச்சாமி முன்வர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அவர் 10 நாட்களில் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், செப். 15ம் தேதி அண்ணா பிறந்த நாளில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பதற்கான பணிகளை நாங்கள் மேற்கொள்வோம் என கூறி இருந்தார்.
செங்கோட்டையனின் இந்த அறிவிப்பை அடுத்து அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. இதையடுத்து, டெல்லி சென்ற செங்கோட்டையன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைப்பதில் அமித் ஷாவும் ஆதரவு தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. செங்கோட்டையன் விதித்த கெடு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்து அதிமுகவில் என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.