கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 11வது ஊராட்சி ஒன்றியமாக அஞ்செட்டியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடந்த அரசு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.270 கோடியே 75 லட்சம் மதிப்பிலான 193 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். ரூ.562 கோடியே 14 லட்சம் மதிப்பிலான 1,114 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதே போல பல்வேறு துறைகளின் சார்பில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 13 பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 52 கோடியே 3 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி, எம்எல்ஏக்கள் மதியழகன், பிரகாஷ், ராமச்சந்திரன், எம்பி கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் வரவேற்றார். இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான அடித்தளங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் போடப்பட்டது. திராவிட மாடல் ஆட்சிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும் நீண்ட நெடிய உறவு உண்டு.
இங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு புதிய அறிவிப்புகள் சொல்லாமல் சென்றுவிட முடியுமா. தளி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் பல்வேறு கிராம பொதுமக்களும், பழங்குடியினரும் ஒன்றிய தலைமை இடத்திற்கு சென்று வர அதிக தூரம் பயணிக்க வேண்டி இருப்பதால் அஞ்செட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும். கெலமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு மலைகிராமங்களுக்கு ரூ.12.43 கோடி மதிப்பில் புதிய சாலைகள் அமைக்கப்படும்.
கெலமங்கலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கெலமங்கலம் புறவழிச்சாலை அமைப்பதற்கான விரிவான சாத்திய கூறு அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்படும். ஓசூர் மாநகரில் என்.எச்.44 மற்றும் என்.எச்.844 ஆகியவற்றை இணைக்க கூடிய வகையில் புதிய சாலை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்த அறிக்கை தயாரிக்கப்படும். ஓசூர் மாநகரில் எல்சிஇ 104 ரயில்வே கேட் பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்றார். மாவட்டத்தில் ஏற்கனவே 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளநிலையில், தற்போது 11வது ஒன்றியமாக அஞ்செட்டி உதயமாகிறது.
இந்நிகழ்வுகளில், முன்னாள் எம்பியும், திமுக மாநில தீர்மானக்குழு உறுப்பினர் எம்.வி.வெற்றிச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ முருகன், கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் நாகராஜ், முன்னாள் ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலைநாகராஜ், திமுக மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் கேவிஎஸ் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.