அரியலூர்: “தவெக தலைவர் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும். அதில், அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அரியலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி இருக்கும்போது நாங்கள் எப்படி கூட்டணியில் இருக்க முடியும்? முதல்வர் வேட்பாளராக பழனிசாமி இருக்கக் கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை. அதில் இருந்து மற்றவற்றை புரிந்து கொள்ளுங்கள்.
விஜய் பிரச்சாரத்தை நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன். நிறைய இளைஞர்கள், இளம் பெண்கள், 40 வயதுக்கு உட்பட்டவர்கள் திரண்டு வந்திருந்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் விஜய் பேசவில்லை. நான் அதை அப்படி பார்க்கவில்லை. இருந்தாலும் ஜெயலலிதா பாணியில் ஒருவர் பேசினால், அது மகிழ்ச்சியானதுதான்.
பெரம்பலூருக்கு விஜய் சென்றது நள்ளிரவு. நள்ளிரவு தாண்டிய பிறகு பிரச்சாரத்தை ரத்து செய்துதான் ஆக வேண்டும். தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஒரு கூட்டணி உருவாகும் என நான் பலமுறை சொல்லிவிட்டேன். அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது. விஜய் தலைமையில் ஒரு கூட்டணியும், சீமான் தலைமையில் ஒரு கூட்டணியும் நிச்சயம் அமையும். தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிச்சயம் உண்டு” என்றார்.