சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, பரிசுப் பொருட்கள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்த ஓராண்டில் மட்டும் அறநிலையத்துறை சார்பாக 1000 இணையர்களுக்கு திருமணங்களை நடத்தி வைக்க வேண்டும் என்பது இலக்கு.
அதன்படி, முதல்வர், கடந்த ஜுலை மாதம் சுமார் 775 இணையர்களுக்கு திருமணங்களை நடத்தி வைத்தார். இன்றைக்கு, இங்கும், தமிழ்நாடு முழுவதும் நடத்தி வைக்கப்படுகின்ற திருமணங்களின் மூலம், அறநிலையத்துறையின் இலக்கு நிறைவேறியுள்ளது.
இன்று நடைபெறுகின்ற திருமணங்களில் பெரும்பாலான திருமணங்கள் காதல் திருமணங்கள்தான், எனவே இது அறநிலையத்துறையா, அன்பு நிலையத்துறையா என்கின்ற வகையில் அவ்வளவு காதல் திருமணங்களை அண்ணன் சேகர்பாபு நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த இணையர்களை பார்க்கும்போது, மிகுந்த மகிழ்ச்சி. எல்லோருமே நன்கு படித்துள்ளார்கள், அது கூடுதல் மகிழ்ச்சியை தருகின்றது.
50, 60 வருடங்களுக்கு முன்பெல்லாம் இது சாத்தியமில்லை. மணமக்கள் உங்களுடைய அப்பா – அம்மா அல்லது தாத்தா பாட்டியின் திருமண பத்திரிகைகளை எடுத்துப் பார்த்தால், அதில் அவர்கள் படித்து வாங்கிய பட்டம் இருக்காது. மாறாக சமுதாய பெயர், அவர்களுடைய சாதிபேர் தான் இருந்திருக்கும். ஆனால், இன்றைக்கு சாதி பெயர்கள் இருப்பதில்லை. மணமக்கள் படித்து வாங்கிய பட்டங்களின் பெயர்கள்தான் இருக்கின்றன. இந்த பெருமை தமிழ்நாட்டிற்கு மட்டும்தான் இருக்கின்றது.
இதற்கு காரணம், நமது திராவிட இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தான். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் நடத்திய பல்வேறு போராட்டங்களின் காரணமாகத்தான், இத்தனை சீர்திருத்தங்களும் தமிழ்நாட்டிற்கு இன்றைக்கு வந்து இருக்கின்றது.
குறிப்பாக இன்றைக்கு மகளிர் நிறையேபேர் வந்திருக்கின்றீர்கள். மகளிர் மேம்பாட்டுக்காக நம்முடைய முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். ஒரு சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். முக்கியமாக மகளிர் விடியல் பயணத் திட்டம். ஆட்சிக்கு வந்ததுமே, மகளிர் விடியல் பயணம் திட்டத்துக்கு தான் நம்முடைய முதலமைச்சர் கையெழுத்திட்டார்.
இந்த விடியல் பயணத் திட்டம் மூலமாக இந்த நான்கரை வருடங்களில் கிட்டத்தட்ட 780 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கின்றார்கள். ஒரு திட்டத்தை எப்படி அழகாக பயன்படுத்த வேண்டும் என்று மகளிரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மகளிரும் இந்த திட்டத்தின் மூலமாக மாதம் 1,000 ரூபாய் சேமிக்கின்றார்கள். இதுதான் இந்த திட்டத்தின் வெற்றி.
அதே மாதிரி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். ஒவ்வொரு நாளும் 22 லட்சம் குழந்தைகள் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகின்றார்கள். சமீபத்தில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யும் நிகழ்ச்சிக்காக பஞ்சாப் மாநில முதலமைச்சர் சென்னைக்கு வந்திருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தைகளிடம் பேசிவிட்டு, இந்த திட்டத்தை பாராட்டினார்.
முதல்வருக்கு என்னுடைய வாழ்த்துகள். இது ஒரு சிறப்பான திட்டம். விரைவிலேயே என்னுடைய மாநிலத்திலும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றேன் என்று தெரிவித்தார். அவர் கூட்டணி கட்சி முதலமைச்சர் கிடையாது. இதுதான் திராவிட மாடல் அரசு. நம்முடைய முதலமைச்சர் மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு வருகின்றார்.
அதேபோல் பள்ளிபடிப்பு படித்தால் மட்டும் போதாது. பள்ளிப்படிப்பு முடித்து உயர்கல்வி படிக்கவேண்டும் என்பதற்காக, அரசுப்பள்ளியில் படித்து, உயர்கல்வி சேரும், மாணவ, மாணவிகளுக்கு தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் கல்வி உதவித்தொகை சம்மந்தப்பட்ட மாணவர், மாணவிகளின் வங்கிக்கணக்கிலேயே வழங்கப்படுகின்றது. அடுத்து ஒரு முக்கியமான திட்டம். அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம். இந்த திட்டம் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக ஒவ்வொரு மாதமும், ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் மாதம் 1000 ரூபாய் நம்முடைய முதலமைச்சர் கொடுத்திருக்கின்றார்.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு நாளை 15 ந் தேதியோடு 2 வருடம் நிறைவடைந்து மூன்றாவது வருடம் தொடங்கு கின்றது. இப்போது தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்வேறு முகாம்கள் நடத்தி இருக்கின்றோம். இந்த முகாம்களில் கிட்டத்திட்ட 40 சதவீத விண்ணப்பங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி மனுக்கள் அளித்து இருக்கின்றீர்கள். சென்ற முறை எனக்கு மிஸ் பண்ணீட்டீங்க. எதிர் வீட்டு அக்காவிற்கு கிடைக்குது எனக்கு கிடைக்கவில்லை. இப்படி சில புகார்கள் வந்திருக்கின்றன.
முதலமைச்சர் திட்டத்தின் சில விதிகளை தளர்த்தியுள்ளார். நிச்சயம் செல்கின்றேன். இன்னும் ஓரிரண்டு மாதங்களில் தகுதியுள்ள விடுபட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் 1,000 ரூபாய் நிச்சயமாக கிடைக்கும். இது மாதிரியான திட்டங்களால தான் இன்னைக்கு 11.19 சதவீதம் வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கின்றது.
இன்னும் சொல்லப் போனால், அண்ணன் சேகர்பாபு பொறுப்பு வகிக்கும் இந்து சமய அறநிலையத்துறை மிகச்சிறப்பாக செயல்பட்டுட்டு கொண்டிருக்கின்றது. இந்த நான்கரை வருடங்களில் மட்டும் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 700 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு இருக்கின்றது.
ஆயிரத்துக்கும் அதிகமான திருக்கோயில்களுக்குச் சொந்தமான 8 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு இருக்கின்றது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் மூலம் 29 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு இருக்கின்றது. நம்முடைய அரசு அமைந்த பிறகு, சென்னை கொளத்தூர், திருச்செங்கோடு, ஒட்டன்சத்திரம், விளாத்திக்குளம் ஆகிய இடங்களில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அறநிலையத்துறையின் மூலமாக முதல்வர் திறந்திருக்கின்றார்.
ஏழை – எளிய பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று நாம் இந்தக் கல்லூரிகளைத் திறந்தால், கோயில் நிதியில் எதற்காக கல்லூரி திறக்குறீங்கன்னு ஒருவர் தொடர்ந்து கேட்டு வருகின்றார். நான் யாரை செல்கின்றேன் என்று உங்களுக்கு தெரியும். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அறநிலையத்துறையின் நிதியை குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்தக் கூடாது, இது எப்படி நியாயம் என்று கேட்கின்றார். இதை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட் வரை சென்று வழக்குப் போட்டார்கள். ஆனா, கோர்ட், அறநிலையத்துறையின் பணம் மக்களுக்குத்தான் சொந்தம். அதனை கல்விக்கு உபயோகப்படுத்தலாம் என்று அனுமதித்துள்ளார்கள்.
எனக்கு இப்ப என்ன சந்தேகம் என்றால், இன்றைக்கு அறநிலையத்துறையின் சார்பில் இவ்வளவு திருமணங்கள் நடைபெறுகின்றன. இதற்கும் அவர் கோபித்துக் கொள்ளக் கூடும். அறநிலையத்துறை நிதியில மணமக்களுக்கு எப்படி திருமணம் செய்து வைத்தீர்கள் என்று கோபித்துக் கொண்டாலும், கொள்வார். கேள்வி எழுப்பினாலும் எழுப்புவார். அப்படிப்பட்ட நிலைமையில்தான் இன்று எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
திராவிட மாடல் அரசின் சாதனைகள் அவருடைய கண்களை உறுத்திக் கொண்டு இருக்கின்றன. ஆகவே, திராவிட மாடல் அரசு என்றைக்கும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். நீங்கள் அனைவரும் திராவிட மாடல் அரசிற்கும், நம்முடைய முதல்வரும் என்றும் பக்கபலமாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
இந்த நேரத்தில் மணமக்களுக்கு ஒரு சிறிய அறிவுரை. அட்வைஸ் பண்ணா உங்களுக்குப் பிடிக்காது. அது எனக்கு தெரியும். இருந்தாலும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, கூடப்பிறக்காத ஒரு அண்ணனாக இந்த அறிவுரையை சொல்கின்றேன்.
நீங்க ஒருவரையொருவர் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் சுயமரியாதையோடு நடத்த வேண்டும். எதற்கு விட்டுக் கொடுக்க வேண்டுமோ, அதற்கு விட்டுக் கொடுத்து, எதற்கு விட்டுக் கொடுக்க கூடாதோ அதில் திடமாக நின்று சுயமரியாதை உணர்வுடன் உங்கள் திருமண வாழ்க்கையை வாழுங்கள். உரிமைகளை கேட்டுப்பெறுங்கள்.
முக்கியமாக, நம்முடைய முதல்வர் தொடர்ந்து வைக்கின்ற கோரிக்கை. உங்களுக்கு பிறக்கின்ற குழந்தைக்கு, ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தைகயாக இருந்தாலும், அழகான தமிழ்ப்பெயரைச் சூட்ட வேண்டும் என்று கூறிக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.