மதுரை மாநகரில் 1 மணி நேர மழைக்குக்கூட தண்ணீர் வெளியேற முடியாமல் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிப்பதும், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இதற்கு தீர்வு காண மாநகராட்சி, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
கனமழை பெய்தாலே தண்ணீர் வெளியேற முடியாமல் மதுரை மாநகர் சாலைகள் வெள்ளக்காடாக மாறுவதும், போக்குவரத்து ஸத்ம்பிப்பதும், வாடிக்கையாகி விட்டது. மழைநீர் வெளியேறுவதற்கு 13 பிரதான மழைநீர் கால்வாய்களும், ஏராளமான மழைநீர் வடிகால் வாய்க்கால்களும் உள்ளன. இந்த கால்வாய்களையும், குடியிருப்பு வாய்க்கால்களையும் ஒரளவு மாநகராட்சி தூர்வாரி இந்த பருவமழையை எதிர்கொள்ள தயாராகி வந்தது. ஆனாலும், கடந்த 2 நாட்களுக்கு முன் 2 மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால் மதுரை சாலைகள் வழக்கம்போல் வெள்ளக்காடாக மாறியது.
மதுரை மாவட்ட நீதிமன்றம், ரேஸ் கோர்ஸ் சாலை, ஆட்சியர் அலுவலகம், கோ.புதூர் சாலை, மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள், பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், சிம்மக்கல், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, ரயில் நிலையம், காமராஜர் சாலை, டிஆர்ஓ காலனி, தல்லாகுளம், ஆனையூர், முனிச்சாலை, தெற்குவாசல், நத்தம் மேம்பாலம் கீழ்ப்பகுதி சாலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இப்பகுதி சாலைகளில் மழைநீர் முழங்கால் உயரத்துக்கு பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மழைநீரில் மூழ்கி பழுதடைந்தன. மாநகராட்சி ஊழியர்கள், இரவு பகலாக பணிபுரிந்து மழைநீரை வெளியேற்றினர்.
கட்டுமானப் பணிகள்: சாலைகள், தாழ்வானப் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதற்கு, மாநகர் பகுதியில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடக்கும் கட்டுமானப் பணிகளும், அதற்காக அவர்கள் மழைநீர் கால்வாய்களை ஆங்காங்கே அடைத்து வைத்திருப்பதுமே முக்கிய காரணம் என மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறைக்கு அவசர கடிதம் அனுப்பி, அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய்களை மழைநீர் வெளியேறும் அளவுக்கு அகலப்படுத்தவும், கட்டுமானப் பணிகளுக்காக அடைத்து வைக்கப்பட்டுள்ள கால்வாய்களை மழைக்காலம் முடியும் வரை திறந்து விடுவதற்கும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், தற்போதுவரை பொதுப்பணித் துறையும், நெடுஞ்சாலைத் துறையும் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதால் மதுரை மாநகர் பகுதியில் மழை பெய்தால் மீண்டும் சாலைகள் வெள்ளக்காடாக மாறும் நிலைதான் உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கோரிப்பாளையம் மேம்பாலம் பணி நடப்பதால் இப்பகுதி வழியாக செல்லும் மழைநீர் அருகில் உள்ள வைகை ஆற்றுப் பகுதியில் செல்ல முடியாமல் அரசு மருத்துவமனை சாலை, கோரிப்பாளையம் பகுதியில் குளம்போல் தேங்கிவிடுகிறது. பெரியார் பேருந்து நிலையம் தாழ்வாக உள்ளதால் அப்பகுதியில் பெய்யும் மழைநீர், கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்துக்கு செல்வதற்கு ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் பாதாள மழைநீர் குழாய்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஒட்டுமொத்த மழைநீரும், அத்தெப்பத்துக்குள் செல்வதை இந்து சமய அறநிலையத் துறை விரும்பாததால் அந்த திட்டம் அறிவித்த வேகத்திலேயே கைவிடப்பட்டது.
தூர்வார நடவடிக்கை: ஏற்கெனவே இருந்த கால்வாயை மாநகராட்சி தூர்வாரினாலும் பொதுமக்கள், வியாபாரிகள் கொட்டிய குப்பைகளால் பெரியார் பேருந்து நிலையத்தில் தேங்கும் மழைநீர் தடையின்றி செல்ல முடியவில்லை. அந்த கால்வாயை தற்போது தூர்வாரும் பணி நடக்கிறது. மதுரை ரேஸ் கோர்ஸ் சாலை சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்யும் மழைநீர், பாதாள மழைநீர் கால்வாய் வழியாக மாவட்ட நீதிமன்றம் வளாகத்தில் உள்ள செங்குளம் கண்மாயில் சென்று தேங்கும். இந்த கால்வாய் குறுகலாக உள்ளதோடு இதில் தண்ணீர் சென்றால் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தண்ணீர் தேங்கும் என்பதால், பொதுப்பணித் துறையினர் அந்த மழைநீர் கால்வாயையும் அடைத்து வைத்துள்ளனர். அதனால், ராஜா முத்தையா மன்ற ரவுண்டானா முதல் ரேஸ் கோர்ஸ் சாலை முழுவதும் தெப்பம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
வடி கால்வாய்கள் ஆக்கிரமிப்பு: மேலமடை சிவகங்கை நெடுஞ்சாலையில் மேம்பால கட்டுமானப் பணிக்காக, வக்பு வாரிய கல்லூரி வழியாக செல்லக்கூடிய மானகிரி பிரதான மழைநீர் கால்வாயை நெடுஞ்சாலைத் துறை அடைத்து வைத்துள்ளது. அதனால் கே.கே.நகர், அண்ணாநகர், மாட்டுத்தாவணி மார்க்கெட் பகுதியில் பெய்யும் மழைநீர் வண்டியூர் கண்மாய்க்கு செல்ல முடியவில்லை. இதுபோல் நகரின் 20 முக்கியமான மழைநீர் தேங்கும் இடங்களில் பிரதான மழைநீர் வடிகால் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு, அவற்றை அகற்ற பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறைகளின் ஒத்துழைப்பு இன்மை போன்றவற்றால் மழைநீர் தடையின்றி அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு செல்ல வழியில்லாமல் நகர்ப்பகுதியிலே ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சரியான திட்டமிடல் இல்லாமல் செய்யப்படும் பணிகளால் மதுரையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பகுதிகள் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அரசுத் துறைகள் ஒன்றுக்கொன்று குறை சொல்வதை விட்டுவிட்டு சாலைகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க உரிய தீர்வுகாண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.