மதுரையில் இருந்து பிரிந்து திண்டுக்கல் மாவட்டம் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்து 41-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், வளர்ச்சிப்பாதையில் சென்று மக்களை தன்னிறைவு பெறச் செய்துள்ளதா திண்டுக்கல் மாவட்டம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு 1985-ம் ஆண்டு முன்னள் முதல்வர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி அப்போதைய முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது திண்டுக்கல் மாவட்டம். தொடக்கத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் அண்ணா மாவட்டம் என்றும், திமுக ஆட்சிக் காலத்தில் காயிதேமில்லத் மாவட்டம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. தற்போது திண்டுக்கல் மாவட்டம் என அழைக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வளங்களும் கொட்டிக் கிடக்கின்றன. தொழில் வளம், விவசாயம், ஆன்மீகம், சுற்றுலா என அனைத்தும் இயற்கையிலேயே அமையப் பெற்றுள்ளது.
நசிந்து வரும் தொழில்கள்: திண்டுக்கல்லுக்கு பெயர் பெற்ற பூட்டுத் தொழில் இன்று அலிகார் பூட்டு உள்ளிட்ட பல ஊர்களில் பூட்டு தயாரிப்பின் போட்டி காரணமாக, புவிசார் குறியீடு பெற்றும் தழைத்தோங்க முடியவில்லை. பூட்டு செய்யும் தொழில் நசிவடைந்து வருகிறது. தோல் பதனிடும் தொழிற்சாலைகள் படிப்படியாக மூடப்பட்டு தற்போது விரல்விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.
நூற்பாலைகள் மிகுந்த வேடசந்தூர் பகுதி மட்டும் அப்பகுதி கிராமப்புற மக்களுக்கு ஓரளவு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு புதிதாக தொழிற்சாலைகள் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைக்கப்படாததால் மாவட்ட மக்கள் வேலைவாய்ப்புக்கு அண்டை மாவட்டங்களான கரூர், திருப்பூர், கோவைக்கு இடம்பெயரும் நிலைதான் தொடர்கிறது. தொழில் வளர்ச்சியில் மாவட்டத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசென்றால் பல வேலை வாய்ப்புக்களை உருவாக்கி மக்கள் நேரடியாக பயன்பெறச் செய்யலாம்.
சுற்றுலா ஊக்குவிப்பு இல்லை: தமிழகத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை தேவைகள் நிறைவேற்றப் பட்டுள்ளனவா என்றால் இல்லை. ‘மல்டி லெவல் கார் பார்க்கிங்’ அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக அரசின் பரிசீலனையில் மட்டும் உள்ளது. இதனால் நகரில் வாகனங்கள் நிறுத்த என இடம் இல்லாமல் ஆங்காங்கே சாலை ஓரம் நிறுத்துவதால் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதிப்புக்குள்ளாவதும் வாடிக்கையாக உள்ளது. கொடைக்கானலில் மலைக்கிராம சுற்றுலாவை மேம்படுத்த அரசு திட்டமிட்டது.
இந்த திட்டத்துக்கு அரசு எந்த நிதியும் ஒதுக்க தேவையில்லை. வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டாலே போதும் கொடைக்கானல் மலைக்கிராமங்களில் உள்ள மக்களுக்கு ஹோம் ஸ்டே உள்ளிட்டவை மூலம் பொருளாதாரமும் உயர வாய்ப்பாக அமையும். குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவையும் குறைவாகவே உள்ளது. சுற்றுலாப் பயணிகளை கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் மட்டுமே தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மலைப்பகுதியில் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பயன்பாடு தாரளமாக உள்ளது. இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘அட்வென்சர் பார்க்’ திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஊட்டிக்கு அடுத்து அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் கொடைக்கானலை, எந்த ஆட்சியானாலும் பாரமுகமாகவே கையாள்வது தொடர்கிறது. அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவது, தடை செய்யப்பட்ட கனரக இயந்திரங்கள் மலைப்பகுதியில் பயன்பாடு என்பது ஆட்சிகள் மாறினாலும் மாறாத காட்சிகளாகத் தான் உள்ளன.
வளர்ச்சி கண்டதா ஆன்மீக தலம் ?: பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் செல்ல 2-வது ரோப்கார் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்தப் பணியும் நடைபெறவில்லை. இதனால் பக்தர்கள் மலைக்கோயில் செல்ல இழுவை ரயில், ரோப் கார் ஆகியவற்றில் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதிகள் வந்து செல்லும் பக்தர்களுக்கு ஏற்ப போதுமானதாக இல்லை. ஸ்ரீரங்கத்தில் பக்தர்களின் வசதிக்காக குறைந்த வாடகையில் தங்கிச் செல்ல ‘யாத்திரி நிவாஸ்’ கட்டியது போல் பழநியில் ஒன்றும் கட்டப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பது பக்தர்களின் நீண்டகால கோரிக்கை. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
பழநி நகரில் வையாபுரி கண்மாயை சுற்றி திறந்தவெளி கழிப்பிடங்கள் தாரளமாக உள்ளன. இது நகரில் உள்ள மக்களுக்கு மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கும் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. சுகதாரக்கேடான ஆன்மிக நகரில் சுகாதாரம் காக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்பது பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.
மகிழ்ச்சியும், ஏமாற்றமும்: திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புற சாலைகள் பெரும்பாலும் நல்லமுறையில் அமைக்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்கள், பிற வாகனங்கள் போக்குவரத்துக்கு ஏதுவாக உள்ளது வரவேற்கத்தக்கது. கிராமப் புறங்களில் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருந்தாலும் இன்னும் மேம்படுத்தி தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க வேண்டும்.
தண்ணீர் பிரச்சனையால் திண்டுக்கல்லுக்கு பொண்ணு கொடுக்க மாட்டோம் என்று ஒரு நிலை இருந்தது. அடுத்தடுத்து வந்த அரசுகளின் பல்வேறு குடிநீர்த் திட்டங்களால் இந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது. தொகுதிக்கு ஒரு அரசு கல்லூரி கொண்டுவரப்பட்டு இம்மாவட்டம் கல்வி வளர்ச்சியில் மேம்பட்டு வருகிறது.
4 ஆண்டுகளில் 6 கல்லூரிகள்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி என மாவட்டத்தில் கல்வி வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 6 கல்லூரிகள் கொண்டுவரப்பட்டுள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையம் இடம் மாற்றம் என்பது திட்டம் கொண்டுவந்து அடிப்படை பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டும், மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனம் காரணமாக சாத்தியமில்லாமல் போயுள்ளது. பேருந்து நிலையத்தை இடம் மாற்றினால் நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு பிறக்கும்.
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பழநி அருகே பச்சையாறு அணைத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. மலர்கள் அதிகம் விளையும் நிலக்கோட்டை பகுதியில் சென்ட் தொழிற்சாலை இதுவரை கொண்டுவரப்படவில்லை. திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு தனியாக ஒரு ரயில் இயக்க வேண்டும். இது தேனி மாவட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற தொடர் கோரிக்கையும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தொலைநோக்குடன் திட்டங்களை செயல்படுத்தினால் மாவட்டம் விரைந்து முன்னேற ஏதுவாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் மாவட்டம் தொடங்கிய நாளை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் வருங்கால தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் உள்ளது.