தானே: மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் மற்றும் டோம்பிவலி நகரங்களில் நேற்று ஒரே நாளில் 67 தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில் தெருநாய்க் கடி பாதிப்பு மக்களுக்கு பெரும் தொந்தரவாக மாறியுள்ளது. இது தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
தானே மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக, தெருநாய்க்கடி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 13), கல்யாண் மற்றும் டோம்பிவிலி நகரங்களில் 67 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக அப்பகுதிகளின் சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் தீபா சுக்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஒரே நாளில் 67 பேர் பாதிக்கப்பட்டதால், அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கல்யாண் டோம்பிவிலி நகராட்சி (KDMC) எல்லைக்குள் அதிகரிக்கும் தெருநாய்களின் தொல்லையே இந்த சம்பவங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகள் உட்பட தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கருத்தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. “ஒவ்வொரு மாதமும், 1,000 முதல் 1,100 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. நாய்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு சிகிச்சை கிடைப்பதையும் மாநகராட்சி உறுதி செய்துள்ளது. வரும் காலத்தில், எங்கள் செயல்பாடுகளை வலுப்படுத்த மேலும் ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு மையம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.