லிவர்பூல்: நடப்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் உலக சாம்பியன் என வரலாற்றில் தனது பெயரை அவர் பதித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகரில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 57 கிலோ பிரிவுக்கான இறுதிப் போட்டியில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற போலந்து நாட்டின் ஜூலியா ஷரமெத்தாவை வீழ்த்தினார் ஜாஸ்மின்.
இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் 4-1 என்ற கணக்கில் ஜாஸ்மின் வெற்றி பெற்றார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற 9-வது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னர் மேரி கோம், நிகத் ஜரீன், சரிதா தேவி, ஜென்னி ஆர்எல், லேகா, நீது, லவ்லினா, சாவிட்டி ஆகியோர் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதி சுற்றுக்கு பிறகு ஜாஸ்மின் வெற்றி பெற்றதாக நடுவர் அறிவித்தார். அந்த அறிவிப்பை ரிங்கில் இருந்த அவர் ஆர்ப்பரித்து கொண்டாடினார். பின்னர் தன்னுடன் விளையாடிய ஜூலியாவை அரவணைத்ததார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஜாஸ்மினுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
யார் இந்த ஜாஸ்மின்? – 24 வயதான ஜாஸ்மின் லம்போரியா ஹரியானா மாநிலத்தின் பிவானியை சேர்ந்தவர். அவர் பிறந்த மண்ணும், குடும்பமும் குத்துச்சண்டை விளையாட்டில் வல்லவர்களாக அறியப்படுகிறார்கள். அதை பார்த்து வளர்ந்த ஜாஸ்மினுக்குள் குத்துச்சண்டை விளையாட்டு ஆர்வம் பிறந்தது.
அவரது பெரிய தாத்தா கேப்டன் ஹவா சிங். ஆசிய போட்டியில் தொடர்ச்சியாக தங்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரராக ஹவா சிங் அறியப்படுகிறார். அவர் நிறுவிய பிவானி பாக்சிங் கிளப்பில் இருந்து விஜேந்தர் சிங், அகில் குமார் ஆகியோர் உருவாகினர்.
ஜாஸ்மினின் உறவினர்களான சந்தீப் மற்றும் பர்விந்தர் ஆகியோர் தேசிய குத்துச்சண்டை சம்பியன்கள். இப்படி பல வெற்றிக் கதைகளையும், அதற்கு சான்றாக அவரது வீட்டு சுவற்றில் மாட்டப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மாடங்களை அலங்கரித்த பதக்கங்களையும் கேட்டும் பார்த்தும் ஜாஸ்மின் வளர்ந்தார்.
இருப்பினும் அவரது குடும்பத்தினர் உலக சாம்பியன் பட்டத்தை வென்றது இல்லை. இப்போது அதை ஜாஸ்மின் சாத்தியப்படுத்தி உள்ளார். அதுவும் அவர் விளையாடிய எடைப்பிரிவில் ஒலிம்பிக்கில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். இப்படி சவால் நிறைந்த பிரிவில் அவர் தங்கம் வென்றுள்ளார்.
2021 ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் 2022 காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றார். ஆசிய போட்டியின் காலிறுதி மற்றும் பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் சுற்றில் தோல்வியுடன் வெளியேறினார். வாய்ப்பு கிடைத்தும் தன்னால் எதுவும் செய்ய முடியாமல் போனதை என்ணி அவர் விரக்தி அடைந்துள்ளார்.
5.9 அடி உயரம், சிறந்த புத்தி கூர்மை, மன பலம் என குத்துச்சண்டை வீராங்கனைக்கு தேவையான பலங்களை கொண்டிருந்த அவர், அந்த தோல்விகளுக்கு பின்னர் தனது ஆட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டார். அதன் பலனாக குத்துச்சண்டை உலக கோப்பை தங்கம் வென்றார். இப்போது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றுள்ளார்.
இந்தியாவின் நூபுர் ஷியோரன் (80+ கிலோ எடைப்பிரிவு) வெள்ளியும், பூஜா ராணி (80 கிலோ எடைப்பிரிவு) வெண்கலமும் வென்றுள்ளனர்.