“கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது. அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது” என இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கும் நிலையில், டெல்லி வந்திருந்த இலங்கையின் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் துறையின் துணை அமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுந்தரலிங்கம் பிரதீப்பை ‘இந்து தமிழ் திசை’க்காக சந்தித்துப் பேசினோம்.
இந்திய வம்சாவளி அமைச்சர்களில் மூவரில் ஒருவரான நீங்கள் மலையகத் தமிழர்களுக்காக சாதித்ததைக் கூற முடியுமா?
கல்வி மூலமே எங்கள் சமூகத்தின் விடிவு தங்கியுள்ளது. இதை நன்கு உணர்ந்து, இந்திய வம்சாவளி மக்களுக்கான பாடசாலைகளின் பவுதிக, மனித வள அபிவிருத்தி பணிகளை முனைப்போடு முன்னெடுத்து வருகிறேன். காணி, கட்டிடம், ஆசிரியர் பற்றாக்குறையை நிவிர்த்திக்கும் பணிகள் துரிதமாக நிறைவேற்றப்படுகிறது. வறுமையில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் சுகாதாரம், தோட்ட உட்கட்டமைப்பு, வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திக்கு இதுவரை இல்லாத நிதியை எங்கள் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அவர்களுக்கான காணி உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளேன்.
இந்திய வம்சாவளி மக்களின் கலை கலாசார விழுமியங்களையும், பண்பாட்டு அம்சங்களையும் தாய் மொழியாம் தமிழ் மொழியையும் பேணிப் பாதுகாக்க வேண்டும். இந்த உறுதியில் சுதந்திரத்திற்கு பின் இதுவரை இருந்த அரசுகளை விட எமது தேசிய மக்கள் சக்தி அரசு முற்போக்காகவும், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பேணி பாதுகாப்பதில் உறுதியுடனும் செயல்படுகிறது.
மலையகத் தமிழர்களுக்கு இந்திய அரசு கட்டித் தரும் வீடுகளை வழங்கும் பொறுப்பு உங்களிடம் உள்ளது. இந்தத் திட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது?
இந்திய அரசின் நிதி உதவியுடன் இந்திய வம்சாவளி மக்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுப்பது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பாதியில் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.10 ஆயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் முந்தைய அரசுகள் தொடங்கிய பணிகள் அரைகுறையாக நிற்கின்றன. அவற்றை முழுமையாக கட்டிமுடித்து மக்களிடம் ஒப்படைக்கும் தார்மிக பொறுப்பு எம்மிடம் உள்ளது. மேலும் 4,700 வீடுகளை கட்டி முடிக்க தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன்.
தோட்டத் தொழிலுக்காக வந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாழ்க்கைத் தரம் இப்போது உயர்ந்திருக்கிறதா?
இன்று இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்கள் அனைவருமே தோட்ட தொழிலாளர்கள் தான் என்ற நிலை இல்லை. கணிசமானவர்கள் அரசுப் பணிகளில் இருக்கிறார்கள். பலர் வர்த்தகர்களாகவும், சுயதொழில் செய்வோராகவும் இருக்கிறார்கள். இன்னும் பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்று மத்திய வகுப்பு பொருளாதார நிலையில் உள்ளனர். என்றாலும் இன்னமும் தோட்டத் தொழிலாளர்களாகவே வறுமையில் வாடும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கான சுகாதாரம், கல்வி, வீடமைப்பு, தோட்ட உட்கட்டமைப்பு உள்ளிட்ட அபிவிருத்தி பணிகளுக்காக முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு இப்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 76 ஆண்டுகளாக இலங்கையில் ஆட்சியிலிருந்த அரசுகள் இந்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. வாக்குகளை மட்டும் பெற்றுக்கொண்டு அவர்களின் வாழ்க்கைதரத்தைப் புறக்கணித்தார்கள். ஆனால் எங்களின் தேசிய மக்கள் சக்தி அரசு, இம் மக்களின் முன்னேற்றத்திற்கான ‘ஹட்டன் பிரகடனம்’ எனும் வேலைவாய்ப்பு திட்டத்தை வெளியிட்டது. மலையக மக்களின் வாழ்க்கைதரத்தை முன்னேற்றுவதற்காக அவ் வேலைத்திட்டத்தை அரசு இப்போது விரைவாக முன்னெடுத்து வருகிறது.
தமிழகத்து முகாம்களில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும்… அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துக்கொள்ள உங்கள் அரசு முயற்சிக்குமா?
இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழலால் பல்வேறு நாடுகளுக்கு தமிழ் மக்கள் சென்றாலும், இந்தியாவுக்குத் தான் அதிகமானோர் அகதிகளாக வந்தனர். இன்று வரை அம்மக்கள் இந்தியாவுக்கும் உரித்தில்லாமல், இலங்கைக்கும் சொந்தமில்லாமல் அகதிகளாக காலம் கழிப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அம்மக்களின் அபிலாசைகளை கேட்டறிந்து இரு நாட்டு அரசுகளும் பேசி அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். நாங்கள் அகதிகள் விடயத்தில் நிச்சயமாக கரிசனையுடன் செயல்படுவோம். எதிர்காலத்தில் இவ்விடயத்தில் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வு காண்பதில் முன்நின்று செயல்படுவோம்.
இலங்கையின் புதிய அதிபர் ஆட்சியில் தமிழர்கள் முன்னேற்றத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா?
உண்மையில் இலங்கையில் இதுவரை ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களும், அதிபர்கள், பிரதமர்கள் உள்ளிட்ட அனைவரும் இனவாதத்தை மையப்படுத்தியே ஆட்சிக்கு வந்ததுடன் அதை நடைமுறையும் படுத்தினார்கள். ஆனால் இலங்கை வரலாற்றில் முதல்முறையாக, தமிழ், முஸ்லிம், சிங்களம் என அனைத்து இன மக்களின் ஆதரவையும் பெற்று தோழர் அனுர குமார திசாநாயக்க இன்று ஆட்சியில் உள்ளார். இங்கு அனைத்து இன மக்களுக்கும் பிரச்சினைகள் உள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சியானது தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் இனம் கண்டுள்ளது. நிச்சயமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்போம். தற்போது தமிழ் மக்களுடைய அதிகூடிய விருப்பும் ஆதரவும் அனுர குமார திசாநாயக்கவுக்கே உள்ளது. எனவே, தமிழர்களுக்கான பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு காண்போம்.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறதே..?
இலங்கையை பொறுத்தவரை உலக நாடுகள் அனைத்துடனும் நல்லதோர் நட்புறவையே பேண விரும்புகின்றோம். சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், இந்தியா, சீனா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுடனும் சினேகபூர்வமான நட்புறவிலேயே நாங்கள் இருக்கிறோம்.
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு நிலை எப்படி இருக்கிறது?
எமது சக ஆசிய நாடுகளில் ஒன்று என்ற அடிப்படையிலேயே பாகிஸ்தானுடனான எமது தொடர்பு காணப்படுகின்றது. பாகிஸ்தான் அரசுடன் வர்த்தக ரீதியிலும் சுமுகமான உறவு எங்கள் நாட்டிற்கு உண்டு.
பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசின் ஆதரவு இலங்கைக்கு எப்படி உள்ளது?
பிரதமர் மோடி அவர்கள் மலையக மக்களுக்காக 10 ஆயிரம் வீடு கட்டித்தரும் திட்டத்தை அறிவித்துள்ளார்கள். இது தவிர மேலும் பல்வேறு வீட்டுத்திட்டங்கள் வடக்கு கிழக்கு மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படுகிறது. எம்மை பொறுத்தவரை இந்தியா உலகின் பலமான வல்லரசுகளில் ஒன்று. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடு என்ற அடிப்படையில் இந்தியாவின் தொடர்பு எங்களுக்கு முக்கியம். இந்தியாவின் ஊடாக எங்களது பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டிய தேவை எமக்குள்ளது. எனவே, மோடி அரசாங்கத்துடன் மிக நெருங்கிய தொடர்புகளை பேணி இலங்கை அரசு செயல்படுகிறது.
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கை மீண்டுவிட்டதா… இந்த விஷயத்தில் இலங்கைக்கான இந்தியாவின் நேசக்கரம் எப்படி இருக்கிறது?
உண்மையில் பொருளாதார வீழ்ச்சிலிருந்து தற்போது இலங்கை கட்டம் கட்டமாக முன்னேறி வருகிறது. ஐஎம்எஃப் கூட எமது பொருளாதார வளர்ச்சியை பாராட்டி வருகின்றனர். எங்கள் நாட்டின் பொருளாதார சிக்கலை சமாளிக்க இந்திய அரசு எமக்கு வழங்கிய கடன்களையும் உதவிகளையும் நாங்கள் ஒருபோதும் மறக்க முடியாது. இந்தியாவின் உதவி எமது பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்களிப்பை செய்கின்றது. எனவே, எதிர்காலத்திலும் இந்தியாவின் உதவி தொடர்ச்சியாக கிடைக்கும் பட்சத்தில் நாங்கள் மிகக் குறுகிய காலத்தில் நிச்சயம் பொருளாதார வளர்ச்சியைக் காண்போம்.
இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைக்கு உண்மையில் என்ன தான் காரணம்?
மீனவர்களுக்குள் பிரச்சினை வரக் காரணமாக இருப்பது எல்லைப் பிரச்சினைதான். கடல் வளம் நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டும். தடை செய்யப்பட்ட மீன் பிடிப்பை நாம் வெறுக்கிறோம். எதிர்கால சந்ததியினர் கடல் வளத்தை பயன்படுத்தும் வகையில் அதனை பேணிப் பாதுகாப்பது நம் அனைவரது கடமை. எனவே, சட்டவிரோதமான முறையில் கடலில் மீன் பிடிப்பது நீரியல் சூழலுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது. இதனால், தொடர்ச்சியாக இலங்கை மீனவர்களை இந்திய அரசும் இந்திய மீனவர்களை இலங்கை அரசும் கைது செய்வதை காண்கின்றோம். இதுவும் இருநாட்டு தமிழர்களுக்கு இடையிலான பிரச்சினை தானே தவிர சிங்கள மீனவர்கள் சம்மந்தப்பட்டது அல்ல.
தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைதாகி வரும் நிலையில் இந்தப் பிரச்சினையை தீர்க்க என்ன தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது?
மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசும் இலங்கை அரசும் மனம் திறந்து பேச வேண்டும். அப்போது தான் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும். இது தொடர்பாக சிறந்த பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தி இருநாட்டு அரசுகளும் இணைந்து சிறந்த தீர்மானங்களை எடுக்க முடியும். இருநாட்டு அரசுகளும் சிறந்த நட்புறவுடன் இருப்பதால் இந்தப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டலாம் என நினைக்கின்றேன். தொப்புள்கொடி உறகளுக்கு இடையிலான மீனவர் பிரச்சினையை ஏன் பேசித் தீர்க்க முடியாது? அதற்கான வாய்ப்பை இருநாட்டவரும் மீனவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும். இது தொடர்பாக நாம் மீனவர் சங்கங்களுடன் கதைத்துக் கொண்டிருக்கிறோம்.
கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், “கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது” என அதிபர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருப்பது சர்ச்சையாகி இருக்கிறதே..?
கச்சத்தீவானது ஒப்பந்த அடிப்படையில் சர்வதேச சட்ட ரீதியாக இந்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை மீறி இலங்கையிடமிருந்து அத்தீவை யாரும் அபகரிக்க முடியாது. இதை இருநாட்டு மீனவர்களும் பயன்படுத்தலாம். தமிழ்நாட்டில் தேர்தல் வரும்போது மட்டுமே கச்சத்தீவு குறித்தான விவாதங்களும் பேச்சுகளும் எழுகின்றன. அதனால், இதை ஓர் அரசியல் பேச்சாகவே நாம் கொள்கிறோம்.