திருச்சியில் நேற்று பிரச்சாரம் செய்வதற்காக தவெக தலைவர் விஜய் வந்த போது, காவல் துறை விதித்த நிபந்தனைகளை அவரது தொண்டர்கள், ரசிகர்கள் காற்றில் பறக்கவிட்டனர். இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
திருச்சி மரக்கடை பகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தின்போது, விஜய்யின் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் அனுமதிக்கப்படாது. விஜய் வாகனத்தின் முன்னும் பின்னும் தொண்டர்கள் பைக், 4 சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வரக்கூடாது.
உயரமான கட்டிடங்கள், மரங்களில் ஏறி நிற்க தொண்டர்களுக்கு அனுமதி இல்லை. மேளதாளங்கள் இசைக்கக் கூடாது. அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது. கர்ப்பிணிகள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 23 நிபந்தனைகளை போலீஸார் விதித்திருந்தனர்.
ஆனால், திருச்சியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக விஜய் வந்தபோது, நிபந்தனைகளை தொண்டர்கள் காற்றில் பறக்கவிட்டனர். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்து விஐபி லாஞ்சில் இருந்த விஜய் வெளியே வந்தபோது, அங்கு அவரை வரவேற்க கூடியிருந்த தொண்டர்கள் ஆர்வமிகுதியில் பாதுகாப்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஓடி வந்தனர். அங்கிருந்த போலீஸாரும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் போராடி அவர்களை தடுத்து நிறுத்தினர்.
விஜய்யின் பிரச்சார வாகனம் புறப்பட்டதும், அவரது வாகனத்துக்கு முன்பும், பின்பும் ஏராளமான வாகனங்கள் பின் தொடர்ந்து சென்றன. மேலும், அவரது வாகனத்தை ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டதால், விமான நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பிரச்சார இடமான மரக்கடை செல்ல சுமார் 5 மணி நேரம் ஆனது. இந்த கூட்டத்தில் குழந்தைகளுடன் பெண்கள், சிறுவர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
மரக்கடை பகுதியில் உள்ள கட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள் மீது ஆபத்தான முறையில் ஏராளமானோர் ஏறி நின்றிருந்தனர். பல இடங்களில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் திடீரென கீழே சாய்ந்தது. ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
‘மைக்’கில் கோட்டை விட்ட ‘டீம்’: ஆதவ் அர்ஜூனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம் சார்பில் ‘டீம்’ அமைப்பினர் தான் முழுக்க முழுக்க விஜயின் பிரச்சார பயணத்தை கவனித்து வருகின்றனர். போட்டோ, வீடியோ எடுப்பது, அவற்றை சமூக வலைதளங்கள், செய்தி நிறுவனங்களுக்கு அனுப்புவது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். ஆனால், நேற்று விஜய் பேச ஆரம்பித்த உடனே மைக் வேலை செய்யவில்லை.
இதனால் விஜய் தனது பேச்சை முழுமையாக பேசி முடிக்காமல் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பேசினார். மைக் விஷயத்தில்தான் ‘டீம்’ அமைப்பினர் கோட்டை விட்டதால் விஜய் பேச்சை கேட்க முடியாமல் தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர்.
கூட்ட நெரிசலில் 15 பேர் மயக்கம்: விஜய்யின் பிரச்சார வாகனம் வேகமாக செல்ல முடியாமல் ஊர்ந்து சென்றது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய புத்தூரைச் சேர்ந்த ஹரிணி என்ற பெண் மயங்கி விழுந்தார். அவரை தவெகவினர் விமான நிலையத்தில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதேபோல, மரக்கடை பகுதியில் காலை 8 மணி முதலே இளம்பெண்கள், இளைஞர்கள், குடும்ப பெண்மணிகள் என ஏராளமானோர் காத்திருந்தனர்.
அங்கு குடிநீர் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாததாலும், 10 மணிக்கு மேல் வெயில் கடுமையாக இருந்ததாலும் 15 பேர் மயக்கமடைந்தனர். 5 பெண்களுக்கு வலிப்பு ஏற்பட்டது. சையது முர்துசா பள்ளி ஆஸ்பெஸ்டாஸ் சீட் மீது ஏறி நின்ற 2 இளைஞர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.
வழிநெடுக காலணிகள்: திருச்சி விமான நிலையம் தொங்கி மரக்கடை பிரச்சார செய்யும் இடம் வரையிலும் விஜய் பார்க்க வந்த தொண்டர்கள், பொதுமக்கள், பெண்கள் நெரிசலில் சிக்கி தொலைத்த 1,000-க்கும் மேற்பட்ட காலணிகள் சிதறிக் கிடந்தன. விஜய் வந்து விட்டு சென்ற இடங்கள் அனைத்தும் ஒரு கலவரம் ஏற்பட்டு ஓய்ந்த பகுதி போலவே காட்சியளித்தன.
விஜய் மீது வழக்கு ?: மரக்கடையில் காலை 10.30 மணி முதல் 11 மணி வரை விஜய் பேச போலீஸார் அனுமதித்திருந்தனர். ஆனால், அவர் பிற்பகல் 3 மணியளவில் தான் பேசினார். இதனால், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பேசியதாக அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்ய அதிகம் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
– எம்.கே.விஜயகோபால், தீ.பிரசன்ன வெங்கடேஷ்