திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் நேற்று கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்தார். அப்போது திருமலையில் காணாமல் போனவர்களை விரைவில் கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் கூறும்போது, ‘‘திருமலைக்கு வரும் பக்தர்களை ‘பேஷியல் ரிகாக்னிஷன்’ முறையில் அடையாளம் காணும் முறை அமல்படுத்தப்படும். இது தொடர்பாக எல் அன்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்’’ என்றார்.
இதைத் தொடர்ந்து அவர் லக்கேஜ் கவுன்ட்டர் பகுதியை ஆய்வு செய்தார். அங்குள்ள பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து வைகுண்டம் கியூ காம்ப்ளெக்ஸில் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களிடம், அங்கு அளிக்கப்படும் உணவு, குடிநீர், சிற்றுண்டி வசதிகள் குறித்து கேட்டறிந்தார். வாரி சேவகர்களின் சேவையை மேம்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது தேவஸ்தான தலைமைப் பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா, இணை நிர்வாக அதிகாரி சோம நாராயணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.