இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் 21-வது ஆண்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை சென்னகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து டிரஸ்ட் அறங்காவலர் ஆர்ஆர்.கோபால்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ காலத்தில் கருடசேவைக்காக தமிழகத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மலர் மாலை, வெண்பட்டு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படும். இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் ஆண்டுதோறும் தமிழக மக்கள் சார்பில் திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை சென்னையில் இருந்து 5 நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்து வருகிறது.
அந்த வகையில், 21-வது ஆண்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை சென்னகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து செப்டம்பர் 22-ம் தேதி காலை 10.31 மணிக்கு தொடங்குகிறது. உடுப்பி பலிமாரு மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவித்யாதீஷ தீர்த்தரு சுவாமிகள் ஆசியுரை வழங்கி ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார். இதை தொடர்ந்து, என்எஸ்சி போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக நடைபெறும் ஊர்வலம் மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் கோயிலை சென்றடைகிறது.
அங்கிருந்து வில்லிவாக்கம், திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருவள்ளூர் வழியாக செல்லும் திருக்குடைகள் 27-ம் தேதி காலை திருமலை சென்றடையும். அங்கு மாடவீதியில் வலம்வந்து, வஸ்திரம் மற்றும் மங்கலப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் தேவஸ்தான அதிகாரிகளிடம் திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
ஊர்வலம் செல்லும் வழியில் வசிக்கும் மக்கள், பக்தர்கள் குடும்பத்துடன் வந்து திருக்குடைகளை தரிசிக்க வேண்டும். ஊர்வலத்தின்போது யாரும் திருக்குடைகள் மீது நாணயங்களை வீசுவதோ, காணிக்கைகள் செலுத்துவதோ கூடாது. திருப்பதி திருக்குடை தொடர்பாக நன்கொடைகள் வாங்கப்படாது. எனவே, யாரிடமும் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டாம். மேலும் விவரங்களுக்கு 73730 99562, 73730 99563 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.