சண்டிகர்: பஞ்சாபின் தர்ன் தரன் மாவட்டம், கதூர் சாஹிப் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் லால்புரா. கடந்த 2013-ல் 19 வயது தலித் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தாக்கப்பட்டு, மானபங்கம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக மஞ்சிந்தர் சிங் லால்புரா உள்ளிட்டோருக்கு எதிராக பஞ்சாபின் தர்ன் தரன் மாவட்ட நீதிமன்றத்தில் 12 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் உள்ளிட்ட 7 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் 3 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
குற்றவாளிகளில் ஒருவரான ஹர்விந்தர் சிங் தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கான தண்டனை வரும் 16-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். இந்த தீர்ப்பை தொடர்ந்து எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் குற்றவாளிகள் 11 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி, அத்தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க உத்தரவிட்டார்.