புதுடெல்லி: டெல்லியிலிருந்து மீரட்டுக்கு 84 கி.மீ தூரத்துக்கு ரூ.30,274 கோடி செலவில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 55 கி.மீ தூரத்துக்கு விரைவு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நமோ பாரத் ரயில் 160 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டது.
கிழக்கு டெல்லியில் நியூ அசோக் நகரிலிருந்து உத்தர பிரதேசத்தில் தெற்கு மீரட் இடையே 15 நிமிட இடைவெளியில் 30 நமோ பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொன்றிலும் 6 பெட்டிகள் உள்ளன. இந்த வழித்தடத்தில் 11 ரயில் நிலையங்கள் வழியாக செல்லும்போது மட்டும் சில விநாடிகளுக்கு நமோ பாரத் ரயில் 160 கி.மீ வேகத்தை எட்டும்.
இதற்கு முன் கடந்த 2016-ம் ஆண்டு கதிமேன் எக்ஸ்பிரஸ் ரயில் ஹஸ்ரத் நிசாமுதீன் மற்றும் ஆக்ரா இடையே சிறப்பு ரயில் பாதையில் 160 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டது. அதன்பின்புதான் வந்தே பாரத் ரயிலும் இதே வழித்தடத்தில் அதிகபட்ச வேகமான 160 கி.மீ வேகத்தில் இயக்கி பரிசோதிக்கப்பட்டது. ஆனால் இந்த ரயில்களின் வேகம் மணிக்கு 160 கி.மீ-லிருந்து 130 கி.மீ-ஆக குறைக்கப்பட்டது.
நமோ பாரத் ரயில்கள் மட்டுமே தற்போது 160 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் ஹைதராபாத்தில் வடிவமைக்கப்பட்டு குஜராத்தில் தயாரிக்கப்படுகிறது.
அடுத்ததாக டெல்லி சாராய் கலே கானிலிருந்து உத்தர பிரதேசத்தின் மோதிபுரம் வரை மொத்த தூரம் 82.15 கி.மீ வழித்தடத்தில் உள்ள 16 நிலையங்களிலும் ரயில் போக்குவரத்து விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.