வாஷிங்டன்: ‘‘வர்த்தக வரியை 50 சதவீதம் விதித்ததால், இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது’’ என்று அதிபர் ட்ரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து கடந்த வெள்ளிக்கிழமை ‘ஃபாக்ஸ் நியூஸ்’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் கூறியதாவது: இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தது மிகப் பெரிய விஷயம். அதனால் இரு நாடுகளுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுவிட்டது உண்மைதான். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் மிகப்பெரிய வாடிக்கையாளராக இந்தியா உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா நிறைய கச்சா எண்ணெய் வாங்குகிறது. அதனால் 50 சதவீத வரி விதித்தேன். அப்படி செய்வது சாதாரண விஷயமல்ல.
உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும். ஆனால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால், அது போரை நீட்டிப்பதற்குதான் உதவும். இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.
சீனா மீது 100 சதவீதம் வரி : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நேட்டோ நாடுகளின் தலைவர்களுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:நான் அமெரிக்க அதிபராக இருக்கும்போது ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கவில்லை. முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் போர் தொடங்கியது. இது பைடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் போர் ஆகும். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போரில் 7,118 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த போரை நிறுத்த நான் தீவிர முயற்சி செய்கிறேன்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் முழுமையாக நிறுத்த வேண்டும். அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யா மீது மிகப்பெரிய அளவில் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். அப்போது அமெரிக்காவும் ரஷ்யா மீது மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனா மீது நேட்டோ நாடுகள் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்டும். நான் கூறும் யோசனைகளை நேட்டோ நாடுகள் பின்பற்றினால் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவ்வாறு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.