புதுடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 ஆண்டு சிறைக்கு பிறகு விடுதலையான ஒருவர் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
கடந்த 2006, ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் 11 நிமிடங்களில் அடுத்தடுத்து 7 குண்டுகள் வெடித்தன. இதில் 187 பேர் உயிரிழந்தனர். 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் மும்பை ஏடிஎஸ் போலீஸார் பலரை கைது செய் தனர். அவர்களில் டாக்டர் வஹீத் தீன் முகமது ஷேக் என்பவரும் ஒருவர். இந்த வழக் கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 9 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். இந்நிலையில் இவ ருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என்று ஏடிஎஸ் சிறப்பு நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி விடுதலை செய்தது.
பள்ளி ஆசிரியரான வஹீத் தீன் முகமது அப்போது அவரது குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபராக இருந்தார். தற்போது 46 வயதாகும் அவர் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மகாராஷ்டிர மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
அவர் தனது மனுவில், “இந்த வழக்கில் ஏடிஎஸ் என்னை தவறாக இணைத்தது. இதனால் எனது வாழ்கையை இழந்த 9 ஆண்டுகள், நான் அனுபவித்த அவமானம் மற்றும் என் குடும்பம் அனுபவித்த வலியை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. இளைமைப் பருவத்தின் முக்கிய ஆண்டுகளை நான் இழந்துள்ளேன்.
காவலில் இருந்தபோது சித்திரவதை செய்யப்பட்டேன். இந்த நாட்களில் நான் நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டேன். சிகிச்சை மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்காக நான் வாங்கிய ரூ.30 லட்சம் கடனை திரும்ப செலுத்த வேண்டியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
வஹீத் தீன் தனது மனுவில், தவறான சிறைவாசத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்புகளை சுட்டிக் காட்டியுள்ளார். இதுபோல் அரசிடம் இழப்பீடு கோர தனக்கு உரிமை உள்ளது என கூறியுள்ளார்.