சென்னை: ஒரு கவுன்சிலர், எம்எல்ஏ கூட தவெகவில் கிடையாது. எனவே, பாஜகவை விமர்சிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் பிரதமர் மோடி 75-வது பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ முகாம் சென்னை அமைந்தகரையில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். நயினார் நாகேந்திரன் முகாமை தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி அக்.2-ம் தேதி சேவை வாரமாக கடைப்பிடித்து வருகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் சர்ச்சைகள் எதுவும் இல்லை. கூட்டணியை பொருத்தவரை எந்தக் கட்சியும் கொள்கை அளவில் கூட்டணி வைப்பது கிடையாது. தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி அமைக்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. அதற்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். திமுக கூட்டணி அப்படியேதான் இருக்கிறதே தவிர, அவர்கள் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அவர்கள் கொடுத்த வாக்குறுதி எதையும் இதுவரை செய்தது இல்லை. அரசின் நிர்வாகம் சீர்கெட்டு உள்ளது.
இவர்கள் எப்படி அரசை நடத்துகிறார்கள். திமுக கோட்டையை நாங்கள் அசைக்கவில்லை. கூட்டணியை மட்டும் தான் அசைப்போம். திமுக இதுவரையில் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தது கிடையாது. எனவே, உறுதியாக ஆட்சி மாற்றம் வரும். எங்கள் கூட்டணி வெற்றி பெறும். நான் ஓரிரு நாட்களுக்கு முன்பு கூட ஓபிஎஸ்-யிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். எனவே, எங்களுக்குள் சலசலப்பு ஏதும் இல்லை.
எங்கள் கூட்டணிக்கு கட்சி தலைவர் பழனிசாமி. அவர்கள் கட்சியில் உள்ள பிரச்சினையை அவர்கள் பேசி தீர்த்துக் கொள்வார்கள். நாங்கள் அதிமுக உட்கட்சி பிரச்சினையில் தலையிடுவதில்லை. எங்களுக்கு ஆட்சி மாற்றம் மட்டுமே இலக்கு. பாஜக என்றைக்குமே அடுத்த கட்சி பிரச்சினையில் தலையிடாது.
விஜய் கட்சி தொடங்கி தற்போது பரப்புரை செய்கிறார். அவரது எண்ணமும் தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதுதான். தவெகவை பொருத்தவரை அதில் ஒரு கவுன்சிலரோ ஒரு எம்எல்ஏவோ கிடையாது. எங்களை விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாநில துணைதலைவர் சக்கரவர்த்தி, மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.