சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேசிய லோக்-அதாலத்தில் ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.718.74 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய லோக்-அதாலத் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான எம்.எம்.வஸ்தவா அறிவுறுத்தலின்படி, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரும் மூத்த நீதிபதியுமான எம்.சுந்தர் மேற்பார்வையில் நடத்தப்பட்ட இந்த லோக்-அதாலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 3 அமர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.பி.பாலாஜி, கே.ராஜசேகர், என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன், எம்.ஜோதிராமன் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையிலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிஆர்.பூர்ணிமா மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஜி.சொக்கலிங்கம், எஸ்.ஆனந்தி ஆகியோர் தலைமையிலும் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதேபோல மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்கள் என மொத்தம் 501 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு 90,892 நிலுவை வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன. இதன்மூலம் மொத்தம் ரூ.718.74 கோடிக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற லோக்-அதாலத்தை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திராவும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் நடைபெற்ற லோக்-அதாலத்தை நீதிபதி எம்.தண்டபாணியும் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நடைபெற்ற லோக்-அதாலத்தை நீதிபதி ஜி.கே.இளந்திரையனும் சிறப்பு பார்வையாளர்களாக மேற்பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கினர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய லோக்-அதாலத்தில் 1,026 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, ரூ.53.01 கோடி இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன், சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.நசீர்அகமது, தொழிலாளர் நீதிமன்ற முதன்மை நீதிபதி டி.லிங்கேஸ்வரன், மாவட்ட சட்ட உதவி ஆலோசனை மைய செயலாளர் எஸ்.பி.கவிதா, சிறு வழக்குகள் நீதிமன்ற பதிவாளர் பி.திவ்யாதயானந்த் மற்றும் வழக்கறிஞர் ஆர்.ராஜேஷ்குமார் மவுரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதேபோல மாநிலம் முழுவதும் நடந்த இந்த லோக்-அதாலத்ஏற்பாடுகளை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான எஸ்.பாலகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட நீதிபதிகள் செய்திருந்தனர்.