சென்னை: ‘ஜானி’ படப்பிடிப்பில் நடந்த ருசிகர சம்பவம் ஒன்றை இளையராஜாவுக்கான பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.
கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனையொட்டி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் இளையராஜா மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, “ரஜினிகாந்த் எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் போன் செய்து நாம் செய்தவற்றை எல்லாம் நான் சொல்லப் போகிறேன் என்று சொன்னார். அப்போது நான் பெல்பாட்டம் பேன்ட் போட்டுக் கொண்டு, தலைமுடியை படித்து வாரிக் கொண்டு இருந்ததிலிருந்து இப்போது எப்படி மாறினேன் என்று சொல்லப் போகிறேன் என்றார். நான், ரஜினி, மகேந்திரன் மூவரும் ஒருநாள் குடித்தோம். அதை குறிப்பிட்டு ‘நீங்கள் குடித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அரை பாட்டில் குடித்து நீங்கள் ஆடிய ஆட்டம் இருக்கு பாருங்க. அதை நான் சொல்லப் போகிறேன்’ என்று கூறினார்” என்று இளையராஜா தெரிவித்தார்.
இளையராஜா இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதே தனது இருக்கையில் இருந்து எழுந்த ரஜினிகாந்த் இளையராஜாவின் அருகில் சென்று மைக்கை பிடித்து பேசத் தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது: “விஜிபியில் ‘ஜானி’ படப்பிடிப்பின் போது ஒரு நாள் இரவு நானும் மகேந்திரன் சாரும் மது அருந்தினோம். இவரிடம் ‘சுவாமி நீங்க?’ என்று கேட்டோம். இவரும் ‘ம்ம்ம்ம்’ என்றார். அரை பாட்டில் பீர் குடித்துவிட்டு இவர் போட்ட ஆட்டம் இருக்கே! அதுமட்டுமின்றி ஊரில் இருக்கும் கிசுகிசு எல்லாம் கேட்கிறார். அதுவும் முக்கியமாக ஹீரோயின்கள் பற்றி. அப்படி இருந்தவர் இப்போது இப்படி மாறிவிட்டார்” இவ்வாறு ரஜினி தெரிவித்தார். ரஜினிகாந்த் பேசப் பேச பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஆரவாரம் எழுந்தது. இதனை முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டோர் ரசித்துப் பார்த்தனர்.